மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.


தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் கார்த்திகை திருவிழாவும் ஒன்று. பத்து நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில் கொடியேற்றம் தற்போது நடைபெறுகிறது.


முன்னதாக உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு ஆதாரதனைகள் நடைபெற்றது. இதையடுத்து சுவாமி தெய்வானையுடன் சர்வ அலங்காரத்தில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார். 




அங்கு தங்கமுலாம் பூசப்பட்ட கொடிமரத்தில் புனிநீர் கொண்டு அபிஷேகம் செய்த தர்ப்பை புல், மா இலை, சந்தனம் குங்குமம், பூமாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது.


திருவிழாவினை ஒட்டி, சுப்ரமணிய சுவாமி தெய்வானையுடன் தினமும் சுவாமி காலையிலும், மாலையிலும் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.


விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற டிசம்பர் 5 ஆம் தேதி மாலை 7 மணி அளவில் பட்டாபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து 6ஆம் தேதி மாலையில் கோவிலில் தீபம் ஏற்றப்பட்டு மலைமீது உச்சி பிள்ளையார் கோவிலில் கார்த்திகை மகாதீபமும் மாலை 6 ஏற்றப்படும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.