தமிழ் மாதங்களில் மிக மிக முக்கியமான மாதம் கார்த்திகை ஆகும். ஐயப்ப பக்தர்களுக்கு மிக மிக முக்கியமான மாதமாக இந்த கார்த்திகை மாதம் திகழ்கிறது. ஜோதிட சாஸ்திரப்படி சூரிய பகவான் விருச்சிக ராசியில் பயணிக்கத் தொடங்கும் மாதமே கார்த்திகை மாதம் ஆகும்.
நாளை பிறக்கிறது கார்த்திகை:
இந்த கார்த்திகை மாதத்தை முக்தி அடைவதற்கு வழிகாட்டும் புண்ணிய மாதம் என்றும் ஆன்மீக பெரியோர்கள் குறிப்பிடுகிறார்கள். பொதுவாக ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கடவுளுக்கும் உகந்த மாதமாக திகழும் சூழலில் கார்த்திகை மாதமானது சிவபெருமான், ஐயப்பன், முருகன், விநாயகர் என அனைத்து தெய்வங்களுக்கும் உகந்த மாதமாக கார்த்திகை திகழ்கிறது.
நடப்பாண்டிற்கான கார்த்திகை மாதம் நாளை பிறக்கிறது. நவம்பர் 16ம் தேதி தொடங்கும் கார்த்திகை மாதம் வரும் டிசம்பர் 15ம் தேதி வரை வருகிறது. கார்த்திகை மாதத்தின் மிகவும் முக்கியமான நிகழ்வாக கார்த்திகை தீபம் உள்ளது. சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் முதன்மை தலமான திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம். பரணி தீபம், கார்த்திகை தீபம், பாஞ்சாரா தீபத்தை நேரில் தரிசிக்க லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிவார்கள்.
கார்த்திகை தீபம்:
சிவாலயங்களில் கோலாகலமாக கார்த்திகை தீபம் கொண்டாடப்படுவது போல, முருகப்பெருமானின் ஆலயங்களிலும் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுவது வழக்கம். கார்த்திகை மாதம் நாளை பிறப்பதை முன்னிட்டு இன்று ஐப்பசி மாத பௌர்ணமி என்பதால் இன்று பக்தர்கள் திருவண்ணாமலையிலும், திருச்செந்தூரிலும் குவிந்துள்ளனர்.
கார்த்திகை மாதமானது ஐயப்பனுக்கு மிகவும் உகந்த மாதம் ஆகும். கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணியத் தொடங்குவார்கள். நாளை கார்த்திகை மாதம் பிறக்க உள்ள நிலையில், சபரிமலை இன்று நடை திறக்கப்பட்டுள்ளது. இனி மகர விளக்கு மற்றும் மண்டல பூஜை தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்குச் செல்வார்கள் என்பதால் நாளை முதல் தமிழ்நாட்டின் பல்வே பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
சிறப்பு பூஜை:
கார்த்திகை மாதம் பிறப்பதை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் நாளை சிறப்பு பூஜைகளும், வழிபாடும் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிவார்கள் என்பதால் திருவண்ணாமலை. திருச்செந்தூர் போன்ற மிகப்பெரிய கோயில்களில் வழக்கத்தை விட அதிக பாதுகாப்பு ஏற்பாடும், பக்தர்கள் தரிசனத்திற்கு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.