தமிழ்க் கடவுள் என்று பக்தர்களால் பக்தியுடன் போற்றப்படுபவர் முருகப்பெருமான். முருகனுக்கு மிகவும் உகந்த நாட்களில் ஒன்று சஷ்டி ஆகும். மாதத்திற்கு இரு முறை சஷ்டி வந்தாலும் ஐப்பசி மாதத்தில் வரும் சஷ்டி மகாசஷ்டியாக, கந்த சஷ்டி திருவிழாவாக பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.
கந்தசஷ்டி விழா தொடக்கம்:
இந்த சஷ்டியில்தான் முருகன் சூரபத்மனை வதம் செய்ததாக புராணங்களில் கூறப்படுகிறது. நடப்பாண்டிற்கான கந்த சஷ்டி திருவிழா இன்று தொடங்கியது. கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் காலை முதலே முருகன் கோயில்களில் குவிந்து வருகின்றனர். குறிப்பாக, முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் கந்த சஷ்டி திருவிழா தொடக்கத்திற்காக காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
திருச்செந்தூர் முருகன் கோயில் கடந்த ஒரு வாரமாகவே கந்தசஷ்டி திருவிழாவிற்காக களைகட்டி காணப்பட்ட நிலையில், இன்று பக்தர்கள் அதிகாலை முதல் திரளாக வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், கந்தசஷ்டி திருவிழாவின் உச்சபட்ச நிகழ்வான சூரசம்ஹாரத்திற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருச்செந்தூரில் முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்வான சூரசம்ஹார நிகழ்வை காண மட்டும் வரும் 6 லட்சம் பக்தர்கள் குவிவார்கள் என்று கருதப்படுகிறது.
சூரசம்ஹாரத்திற்கான ஏற்பாடுகள் தீவிரம்:
சூரசம்ஹாரம் வரும் 7ம் தேதி நடக்கிறது. கந்த சஷ்டி திருவிழா தொடங்கியிருப்பதால் முருக பக்தர்கள் பலரும் இன்று முதல் முருகனுக்கு விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்த தொடங்கி வருகின்றனர். திருச்செந்தூர் கோயிலுக்கு அளவுக்கு அதிகமாக பக்தர்கள் வருவார்கள் என்பதால் அங்கு பாதுகாப்பும், பக்தர்களின் வசதிக்கான ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், கடலில் நீராடும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக கடல் பாதுகாப்பு குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
பழனியிலும் காலை முதல் சிறப்பு பூஜைகளும், வழிபாடும் நடைபெற்று வருகிறது. கந்த சஷ்டி திருவிழா தொடங்கியிருப்பதால் தமிழ்நாடு முழுவதும் உள்ள முருகன் கோயில்களுக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் அரசு சார்பில் இயக்கப்பட உள்ளது. சூரசம்ஹார தினத்திற்கு முந்தை நாள் மற்றும் சூரசம்ஹாரம் நடக்கும் நவம்பர் 7ம் தேதி இந்த பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்:
தமிழ்நாடு முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் அதிகாலை முதல் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும், வழிபாடும் நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள பிரபல முருகன் கோயிலான வடபழனி செந்திலாண்டவர் கோயிலில் காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.