தமிழ் கடவுள் என அழைக்கப்படும் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது. இந்த அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடானது திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயிலாகும். உலகப்புகழ்பெற்ற பழனி முருகன் கோயிலில் மொட்டை எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் என பக்தர்கள் தாங்கள் வேண்டிய நேர்த்திக் கடன்கள் செலுத்தி வருகின்றனர். வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து இந்த கோயிலுக்கு தினந்தோறும் பக்தர்கள் ஏராளமானோர் வருவதுண்டு.




இந்த கோயிலுக்கென பல்வேறு சிறப்புகள் இருப்பதால் இங்கு வந்து வழிபட்டு தாங்கள் வேண்டிய நேர்த்திக்கடனை செலுத்துவதற்கு அதிகம் வருவர். ஆண்டுதோறும் பழனி மலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இதில் ஏராளமான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்து கொள்வார்கள். அந்த வகையில் இந்த வருடத்திற்கான கந்தசஷ்டி விழா இன்று மதியம்  மலைக்கோவிலில் உச்சி காலத்தில் காப்புக் கட்டுதலுடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் 7ம் தேதி நடைபெறுகிறது.




அன்று அதிகாலை 4 மணிக்கு கோவில்நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், 4.30 மணிக்கு விளாபூஜை, படையல் நெய்வேத்திய நிகழ்ச்சி நடைபெறும். பகல் 12 மணிக்கு உச்சி கால பூஜை, 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும். அதனை தொடர்ந்து 3.10 மணிக்கு மலைக்கோவிலில் சின்னகுமாரர் அசுரர்களை வதம் செய்ய மலைக்கொழுந்து அம்மனிடம் வேல்வாங்கும் நிகழ்ச்சி நடைபெறும். அதன்பின் சன்னதி அடைக்கப்படும். அன்று மாலை 6 மணிக்கு வடக்கு கிரிவீதியில் தாரகாசூரன் வதம், கிழக்கு கிரிவீதியில் பானுகோபசூரன், தெற்கு கிரிவீதியில் சிங்கமுக சூரன், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் வதம் நடைபெறும்.




அதனை தொடர்ந்து மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நவ.8-ம் காலை 9.30 மணிக்கு மலைக்கோவிலில் வள்ளி-தெய்வானை, சண்முக திருக்கல்யாணம் நடைபெறும். சூரசம்ஹாரம் காரணமாக நவ.7-ம் தேதி தங்கரத புறப்பாடு நிறுத்தப்படும். விழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.




தீபாவளி மற்றும் தொடர் விடுமுறை காரணமாகவும், நேற்று வெள்ளிக்கிழமை மற்றும் அமாவாசை என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை அடிவாரத்தில் குவிந்தனர். படிப்பாதை யானை பாதை வழியாக நடந்து செல்லும் பக்தர்கள் மலைக்கோவிலில் இரண்டு மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் ரோப் கார் பராமரிப்பு பணிக்காக 45 நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளதால் மின் இழுவை ரயிலில் குழந்தைகளுடன் இந்த பக்தர்களும் முதியோர் என சுமார் 3 மணி நேரம் வரை காத்திருந்து மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனத்திற்கு இரண்டு மணி நேரம் வரை காத்திருந்தும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.  மேலும் பக்தர்கள் பாதுகாப்பு கருதி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.