சென்னை புறநகர் பகுதியில் இருக்கக்கூடிய முக்கிய கோயிலான வல்லக்கோட்டை முருகன் கோவிலில் இந்த ஆண்டு சூரசம்ஹாரம் விழா வருகின்ற திங்கட்கிழமை நடைபெற உள்ளது.

Continues below advertisement


சூரசம்ஹாரம் 


கந்தசஷ்டி விரதம் இருந்த பின்னர் சூரசம்ஹாரம் நடத்தப்பட்டு முருகப்பெருமானின் திருக்கல்யாணத்துடன் இந்த சூரசம்ஹார விழா அரங்கேறுவது வழக்கம். நடப்பாண்டிற்கான சூரசம்ஹாரம் வரும் அக்டோபர் 27 ஆம் தேதி நடக்கிறது. இதையடுத்து, சூரசம்ஹாரத்திற்கான கந்த சஷ்டி விரதம் நேற்று தொடங்கியது. 


இதற்காக பக்தர்கள் தயாராகி வருகின்றனர். சூரசம்ஹாரம் முருகனின் அறுபடை வீடான திருச்செந்தூரில் நடைபெறும். இருப்பினும் அறுபடை வீடுகளும், உலகெங்கிலும் உள்ள முருகன் கோயில்களிலும் கந்தசஷ்டி விரதத்திற்கான சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் கந்த சஷ்டி விரதத்தை முன்னிட்டு நடைபெற்று வருகிறது.


வல்லக்கோட்டை முருகன் கோயில் - Vallakkottai Murugan Temple 


சென்னை புறநகர் பகுதியில் இருக்கக்கூடிய முக்கிய கோயில்களில் ஒன்றாக, காஞ்சிபுரம் வல்லக்கோட்டை முருகன் கோயில் இருந்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள வல்லக்கோட்டை முருகன் கோயில் சுமார் 1200 ஆண்டுகள் பழமையான கோவில் என நம்பப்படுகிறது. 


வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பிரம்மாண்டமே, 7 அடி உயரம் கொண்ட முருகனின் திருவுருவம் தான். இந்தியாவில் உள்ள உயரமான மூலவர் முருகர் சிலையில் ஒன்றாக இந்த சிலை இருந்து வருகிறது. மூலவர் கோடை ஆண்டவர் என்ற பெயரில் வள்ளி, தெய்வானையுடன் கிழக்கு நோக்கியபடி காட்சி தருகிறார்.


இங்கு இருக்கும் முருகனை வணங்கி விரதம் இருந்து வழிபட்டு வந்தால், அனைத்து வளங்களையும் பெறுவதற்கான வல்லமையை முருகன் தருவார் என்பதற்காக, வல்லக்கோட்டை முருகன் என பெயர் வந்ததாக கூறுகின்றனர். 


தல புராண கதையின் அடிப்படையில், இழந்த செல்வம் திரும்ப கிடைக்க வேண்டும் என்றால் தொடர்ந்து, ஏழு வெள்ளிக்கிழமைகள் விரதம் இருந்து, வழிபட்டு வந்தால் நினைத்ததை நிறைவேறும் என பக்தர்கள் நம்புகின்றனர். செல்வத்தை மீட்டெடுக்க வல்லக்கோட்டை முருகன் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்பது ஐதிகமாக இருக்கிறது.


வல்லக்கோட்டை கந்த சஷ்டி விழா ( Vallakkottai Murugan Temple Kandha Shashti )


சென்னை புறநகர் பகுதியில் இருக்கக்கூடிய மிக முக்கிய கோயில் என்பதால் வல்லக்கோட்டை முருகன் கோயிலில் ஒவ்வொரு வருடமும் கந்த சஷ்டி விழா என்பது மிக விமர்சையாக நடைபெறும். தினமும் முருகப்பெருமான் பல்வேறு அலங்காரங்களின் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இதனைத் தொடர்ந்து வேல் வழங்கும் நிகழ்ச்சி அதற்கு அடுத்த நாள் சூரசம்காரம் நிகழ்ச்சி ஆகியவை மிகவும் விமர்சையாக நடைபெறும். 


இந்தநிலையில் காஞ்சிபுரம் வல்லக்கோட்டை முருகன் கோவிலில் கடந்த 2019 ஆம் ஆண்டு கடைசியாக கந்த சஷ்டி விழா நடைபெற்றது. கொரோனா வைரஸ் தொற்று மற்றும் கோயில் புனரமைப்பு பணிகள் நடைபெற்றதால் கடந்த ஆறு ஆண்டுகளாக கந்த சஷ்டி விரதம் விழா விமர்சையாக நடைபெறாமல் இருந்து வந்தது.


இந்தநிலையில் இந்த ஆண்டு கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், வருகின்ற 27ஆம் தேதி கந்த சஷ்டி விழா நடைபெற உள்ளது. அதற்கு முந்தன நாள் ஞாயிற்றுக்கிழமை, வேல் வழங்கும் விழாவும் வெகு விமர்சியாக நடைபெற உள்ளது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு கந்த சஷ்டி விழாவில், சூர சம்ஹாரம் நடைபெற உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.