Thirumagaral Temple or Thirumakaral Easwarar Temple : காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே, செய்யாற்றின் வடக்கரையில் மாகறல் கிராமத்தில் அமைந்துள்ள திருமாகறலீஸ்வரர் கோயில் மிக முக்கிய கோயில்களில் ஒன்றாக உள்ளது. தொண்டை நாட்டில் அமைந்துள்ள சிவன் கோயில்களில் தேவார பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் இது 7வது தலமாக அமைந்துள்ளது. 5 நிலை ராஜகோபுரமும், இரண்டு பிரகாரங்களும் கொண்ட கோயிலாக உள்ளது.
இறைவன் உடும்பின் வால் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அடைக்கலம் காத்தநாதர், உடும்பீசர், பாரத்தழும்பர், புற்றிடங் கொண்டார், மகம் வாழ்வித்தவர், நிலையிட்டநாதர், மங்கலங்காத்தவர், அகத்தீஸ்வரர் என பல பெயர்கள் கொண்ட இத்தலத்து ஈசன் சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். திருப்புவன நாயகி தெற்கு நோக்கி அருள்பாலிப்பது, கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது. இக்கோயிலில் முருகப்பெருமான் அபூர்வமாக யானை மீது அமர்ந்து காட்சி தருகிறார்.
தல வரலாறு கூறுவது என்ன ? Thirumakaraleeswarar Temple History
ஒருசமயம் இராஜேந்திர சோழன் இப்பகுதிக்கு வரும்போது, பொன் உடும்பு தோன்றி ராஜேந்திர சோழன் முன் ஓடி ஒரு புற்றில் சென்று மறைந்தார். ராஜேந்திர சோழன் உடன் வந்த வீரர்கள் புற்றைத் தோண்டய போது குருதி வெளிப்பட்டது. சோழ மன்னன் கலங்கி இறைவனை வேண்ட, அவரும் உடும்பு வடிவில் வந்தது தாமே என்றும், அங்கு ஒரு கோயில் எழுப்புமாறும் அசரீரியாக அருளினார். அதனால் இத்தலத்து மூலவர் உடும்பு வடிவில் காட்சி தருகின்றார்.
மாக்கிரகன் என்னும் அசுரன் இத்தலத்து இறைவனை வழிபட்டதால், இத்தலத்து இறைவன் மாக்கிரகீஸ்வரர் என்ற நாமம் பெற்று, பின்னர் மருவி மாகறலீஸ்வரர் என்று மாறியது. பெரிய ஆவுடை, உடும்பு வடிவ மெல்லிய பாணம். அம்பாள் 'திரிபுவன நாயகி' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.
பலன்கள் என்ன ? Thirumakaraleeswarar Temple
இந்தகோயிலுக்கு வந்து வழிபாடு மேற்கொண்டு, அபிஷேகத் தீர்த்தத்தை சாப்பிட ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களும், எலும்பு முறிவு, கண்பார்வை குறைவு, பக்கவாதம் போன்ற நோய்களின் தாக்கம் குறையும் என்ற நம்பிக்கை உள்ளது. பிரிந்த தம்பதியினர் ஒன்று சேரவும், கிரக தோஷம் நீங்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும் இங்கு வந்து அங்க பிரதட்சணம் செய்கிறார்கள்.
முருகப்பெருமான் சிறப்பு என்ன ? Thirumakaraleeswarar Temple Murgar
திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நடந்தது. இந்திரன் முருகனுக்கு திருமணப்பரிசாக வெள்ளை யானையை கொடுத்தான். புதுமணத்தம்பதிகளை வெள்ளையானையில் அமரச்செய்து அக்காட்சியை கண்ணாற கண்டு மகிழ்ந்தான். மகாவிஷ்ணுவும் இக்காட்சியை காண விரும்ப முருகன் இத்தலத்தில் வெள்ளையானை மீது அமர்ந்து காட்சி தந்தார்.
ஸ்தல விருட்சம்: எலுமிச்சை
ஸ்தல தீர்த்தம்: அக்னி தீர்த்தம்
உற்சவம்: மாசிமாதம் பத்து நாள் கொடியேற்றம்.
உற்சவர் : சோமாஸ்கந்தர், நடராஜர்
பதிகம்: திருஞானசம்பந்தர் பாடிய வினை தீர்க்கும் பதிகம் இந்தக் கோயிலில் மிகச் சிறப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது.
கோயில் திறந்திருக்கும் நேரம் : இக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
கோயில் அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 16 கி.மீ. தூரத்திலுள்ள இவ்வூருக்கு, கீழ்ரோடு வழியாக உத்திரமேரூர் செல்லும் பஸ்களில் செல்ல வேண்டும்.