உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவம் சனிக்கிழமை அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மகா சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலின் வருடாந்திர பிரம்மோற்சவத்தையொட்டி, லட்சுமி சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சி அம்மன் அலங்கார மண்டபத்தில், இருந்து கொடிக்கம்பம் அருகில் உள்ள மண்டபத்திற்கு எழுந்தருளினார்.
கொடியேற்றும் விழா
பின்னர் கோயில் ஸ்தானீகர்களால் அஸ்திர தேவர் வைக்கப் பட்டிருந்த சிறிய பல்லக்கு ஒன்றில் கொடிப் பட்டமும் வைக்கப்பட்டு மேளதாளங்களுடன், கோவில் சுற்றுப்பிரகாரத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இதனை அடுத்து கோவிலில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. கொடியேற்றத்திற்கு பிறகு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றது. வாண வேடிக்கைகளும் நடைபெற்றன.கொடியேற்ற விழாவில் கோவில் ஸ்ரீ காரியம் ந. சுந்தரேசு ஐயர், மணியக்காரர் சூரிய நாராயணன், கோயில் செயல் அலுவலர் சீனிவாசன் உள்பட பலரும் கலந்து கொண்டனர் . பிரம்மோற்சவத்தையொட்டி ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளாலும், வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு
கொடியேற்றத்தின் போது பரதநாட்டிய கலைஞர் சென்னையைச் சேர்ந்த விஜய் மாதவன் தலைமையில் பரதநாட்டிய கலை நிகழ்ச்சியும், திருவண்ணாமலை அரசு இசைப்பள்ளி முதல்வர் ஷியாமா கிருஷ்ணன் குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. பிரமோற்சவ விழாவையொட்டி தினசரி காலையிலும், மாலையிலும் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி ராஜ வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
பிரம்மோற்சவ விழா
தினமும் காலை, மாலையில், அம்மன் வீதியுலா நடக்கிறது. மார்ச் 8-ந் தேதி காலை விஸ்வரூப தரிசனமும், இரவில் விடையாற்றி உற்சவத்துடன் பிரம்மோற்சவமும் நிறைவு பெறுகிறது. உற்சவம் நடைபெறும் நாட்கள்: பிப்ரவரி 24-ந் தேதி பகல் சண்டிஓமம், இரவு வெள்ளி மூஷிகம், 25 பகல் வெள்ளி விருஷம், இரவு தங்கமான், 26 பகல் மகரம், இரவு சந்திர பிரபை, 27 பகல் தங்க சிம்மம், இரவு யானை, 28 பகல் தங்க சூர்ய பிரபை, இரவு தங்க அம்சம். மார்ச் 1 பகல் தங்க பல்லக்கு, இரவு நாகம், 2 பகல் முத்து சப்பரம், இரவு தங்க கிளி, 3 பகல் ரதம், 4 பகல் பத்ர பீடம், இரவு குதிரை, 5 பகல் ஆள் மேல் பல்லக்கு, இரவு வெள்ளி ரதம், 6 பகல் சரபம், இரவு கல்பகோத்யானம், 7 தங்க காமகோடி விமானம், 8 பகல் விஸ்வரூப தரிசனம், இரவு விடையாற்றி உற்சவம்.