தமிழ் மாதங்களில் மிக மிக முக்கியமான மாதம் கார்த்திகை ஆகும். ஐயப்ப பக்தர்களுக்கு மிக மிக முக்கியமான மாதமாக இந்த கார்த்திகை மாதம் திகழ்கிறது. கார்த்திகை மாதத்தை முக்தி அடைவதற்கு வழிகாட்டும் புண்ணிய மாதம் என்றும் ஆன்மீக பெரியோர்கள் குறிப்பிடுகிறார்கள். பொதுவாக ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கடவுளுக்கும் உகந்த மாதமாக திகழும் சூழலில் கார்த்திகை மாதமானது சிவபெருமான், ஐயப்பன், முருகன், விநாயகர் என அனைத்து தெய்வங்களுக்கும் உகந்த மாதமாக கார்த்திகை திகழ்கிறது.
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில்
இந்தநிலையில் கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி, பல்வேறு கோயில்களில் விழாக்கோலம் பூண்டுள்ளது. கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் பல பிரசித்தி பெற்ற திருக்கோயில்கள் நோய் தீர்க்கும் திருத்தலங்களாக விளங்கி வருகிறது. அவ்வகையில் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை மாதம் ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்கள் தங்களது தலை சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் தீர மாவினால் அகல் விளக்கு தயார் செய்து, அதில் தீபம் ஏற்றி தலையில் வைத்து கோயில் பிரகாரங்களில் வலம் வந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்துவது வழக்கம்.
மேலும் திருமணம் நடைபெற வேண்டும், குழந்தை பிறக்க வேண்டும், கடன் தொல்லைகள் தீர வேண்டும், கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சினைகள் தீர வேண்டும் உள்ளிட்ட வேண்டுதல்கள் நிறைவேறினால் பக்தர்கள் மண்டல விளக்கு பூஜை மேற்கொள்வது வழக்கமாக உள்ளது.
அதிகாலை முதலே துவங்கியது..
அந்தவகையில் நேற்று காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் அதிகாலை 7 மணி முதலே சிறப்பு பூஜைகளுடன் கடை ஞாயிறு விழா துவங்கியது. ஏராளமான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்து, அரிசி மாவினால் விளக்குகள் தயார் செய்து விநாயகர் மற்றும் கொடிமரம் அருகே அர்ச்சனைகள் மேற்கொண்டு அதன் பின் தீபம் ஏற்றி தலையில் வைத்து கோயில் பிரகாரங்களில் வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்தி நோய் தீர்க்க வேண்டுதலுடன் சிறுவர் முதல் பெரியவர் வரை வழிபாடு மேற்கொண்டனர்.
பலன்கள் என்னென்ன ?
நோய் தீர்க்க வேண்டும் என்பதற்காக பெரும்பாலான பக்தர்கள் இந்த வேண்டுதலை மேற்கொள்கின்றன. தலை சம்பந்தமான நோய்கள், பற நோய்கள்கள் தீர வேண்டுமென வேண்டுதல் செய்து கொள்ளும் பக்தர்கள், ஒரு வருடம் அல்லது மூன்று வருடம் என இந்த நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். சிலர் ஒரே ஆண்டில், மூன்று ஞாயிற்றுக்கிழமை கூட இந்த நேர்த்திக்கடனை செலுத்தும் வழக்கமும் உள்ளது. திருமணம் வேண்டும் என வேண்டிக் கொள்பவர்களும் திருமணம் நிறைவேறிய பிறகு, தங்களது கணவர்களுடன் வந்து இந்த வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். இந்த நேர்த்திக்கடன் பெரும்பாலான பெண்கள் மட்டுமே மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு எப்போது நடக்கிறது ?
கடை ஞாயிறு விழாக்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்த காஞ்சிபுரம் கோவிலுக்கு பக்தர்கள் வருவதால் அதனை சுற்றியுள்ள சிறு வியாபாரிகள் அனைவரும் பயனடைவர். அதன்படி கார்த்திகை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான முதல் வார கார்த்திகை, கடை ஞாயிறு விழா துவங்கியது. தொடர்ந்து நவ., 24, டிச., 1, 8, 15 என, ஐந்து வாரமும் கடைஞாயிறு விழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் .