காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற , காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் விழா 17 ஆண்டுகள் கழித்து வெகு விமர்சியாக நடைபெற்றது.


உலகளந்த பெருமாள்


இந்துக்க கடவுளாக இருக்கக்கூடிய திருமாலுக்கு, 108 திவ்ய தேசங்கள் உள்ள நிலையில் கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் மட்டும் 15 திவ்ய தேச திருக்கோவில்கள் அமைந்துள்ளது. அந்த வகையில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கும் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கும் இடையே, அருள்மிகு ஆரண வல்லித் தாயார் சமேத அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.




இத்திருக்கோவிலில் 108 திவ்ய தேசங்களில், ஸ்ரீ ஊரகத்தான் சன்னதி, ஸ்ரீ காரகத்து பெருமாள் சன்னதி, ஸ்ரீ நீரகத்து பெருமாள் சன்னதி, ஸ்ரீ கார்வானப் பெருமாள் சன்னதி என நான்கு திவ்ய தேச சன்னதிகள் அமையப்பெற்றுள்ள ஒரே திருக்கோவிலாகவும், திருமழிசையாழ்வாரால் பாடப்பட்ட திருத்தலம் எனும் சிறப்பு பெற்று விளங்குகிறது. அந்த வகையில்  ஓங்கி உயர்ந்த உலகளந்த  பெருமாளாக மகாவிஷ்ணு காட்சியளிக்கும், இத்திருக்கோவிலில் கடந்த 2007 ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்று இருந்த நிலையில், மீண்டும் கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. 


கும்பாபிஷேக விழா


திருக்கோயிலில் அதிக பொருட்செலவுடன் ஸ்ரீ உலகளந்த பெருமாள் சன்னதி, ஆரண வல்லித் தாயார் சன்னதி, ராஜகோபுரம் மற்றும் விமானங்கள் புதுப்பிக்கப்பட்டு, வண்ணங்கள் அழகுற தீட்டப்பட்டு, ஓவியங்கள் வரைந்து பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு  திருப்பணிகள் நடைபெற்று முடிந்தது.




அதனைத் தொடர்ந்து 17 ஆண்டுகளுக்குப் பிறகு உலகளந்த பெருமாள் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா  இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாக சாலைகள் அமைக்கப்பட்டு பல்வேறு இந்திய நதிகளில், இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கலசங்கள் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.


அதனைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க கோவில் பட்டாச்சாரியார்கள் புனித நீர் கலசங்களை ஊர்வலமாக கொண்டு வந்து, கோயில் ராஜகோபுரம் சன்னதி கோபுரங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழாவை நடத்தி வைத்தனர். கும்பாபிஷேக விழாவில் காஞ்சிபுரம், மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்து வணங்கி வழிபட்டுச் சென்றனர். பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா எனும் முழக்கமிட்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.



தல வரலாறு கூறுவது என்ன ?



மகாவிஷ்ணுவிற்கு 10 அவதாரங்கள் என புராணங்கள் கூறுகின்றன. அசுர மன்னன் மகாபலி என்பவன் மூன்று உலகங்களையும் ஆண்டு வந்ததாக புராணங்கள் கூறுகின்றன. இதனால் தேவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். தேவர்கள் திருமாலிடம் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து  திருமாலிடம் முறையிட்டனர். மகாபலி ஒரு காலத்தில் மிகப்பெரிய யாகத்தை மேற்கொண்டு வந்தான்.






அப்பொழுது யாகத்தில் கலந்து கொள்ள, வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் தானங்களை வாரி வழங்கி வந்தான். அப்படி தானங்கள் வழங்கினால்தான் யாகம் வெற்றி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சமயத்தில் திருமால் வாமன அவதாரம் எடுத்து மகாபலி மன்னரிடம், தான் தியானம் செய்வதற்கு இடம் வேண்டும் என மகாபலி இடம் கோரிக்கை வைத்தார். 






எவ்வளவு இடம் வேண்டும் என கேட்டதற்கு, சிறுவன் வடிவில் வாமனன் அதைத்தானே தனது கால்களால் மூன்று அடி அளந்து எடுத்துக் கொள்வதாக கூறினார். மகாபலி இதற்கு ஒப்புக்கொண்டார். உடனே திருமால் பிரம்மாண்ட உருவம் எடுத்தார். முதல் அடியில் கீழ் உலகத்தையும், இரண்டாவது அடியில் மேல் உலகத்தையும் அளந்தார். மூன்றாவது அடி அளக்க இடமில்லை என மகாபலியை பார்த்து திருமால் கேட்க, எனது தலை இருக்கிறது என தலையை கொடுத்தார். இதன் மூலம் மூன்று உலகத்தையும் மீட்டு தேவர்களிடம் திருமால் ஒப்படைத்தார்.