Kanchipuram Ekambaranathar Temple: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் திருப்பணிகள் 18 கோடி ரூபாய் மதிப்பிற்கு நடைபெற்று வருகிறது.

Continues below advertisement


காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில்


காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில், (ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாத சுவாமி கோயில்) பஞ்சபூத ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று. இந்தத் தலம் பஞ்ச பூதங்களில் ஒன்றான நிலத்தைக் குறிக்கிறது. இந்தக் கோயிலின் முக்கிய கடவுளான சிவன் ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயரிலும், அம்பிகை காமாட்சி அம்மன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். மொத்தம் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோவில் முதல் கட்டுமானங்கள், 600 ஆம் ஆண்டே கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.


உலகப் பிரசித்தி பெற்ற கோயில்


பல்லவர் காலம் முதல் இந்த கோவில் பிரசித்தி பெற்றதாக இருந்து வருகிறது. அதே போன்று நாயக்க மன்னர்கள் காலம் வரை பல்வேறு மன்னர்களும் திருப்பணி செய்துள்ளனர். பல்வேறு மன்னர்கள் திருப்பணி செய்ததற்கான, ஆதாரமாக கல்வெட்டுக்கள் சான்றுகளாக கிடைத்துள்ளன. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில், பெரிய ராஜகோபுரம் மன்னர் கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. 


தெற்கு ராஜகோபுரம், பல்லவ கோபுரம், மேற்கு கோபுரம் என 3 வகை ராஜகோபுரங்கள் இருப்பது மிகவும் பிரசித்தி பெற்றதாக பார்க்கப்படுகிறது. கிழக்குத்திசை நோக்கி இருக்கும் ஏகாம்பரநாதர் சந்நிதியில் மூலவராக மணல் லிங்கமாக சுயம்புவாக ஏகாம்பர நாதர் அருள்பாலிக்கிறார். கோயில் உட்புறத்தில் சிவகங்கை குளம் மற்றும், கம்பா தீர்த்த குளம் உள்ளது. கோயிலுக்கு வெளிப்பகுதியில் சர்வதீர்த்தமும், மங்கள தீர்த்தமும் உள்ளன. 


சிவன் கோயிலில் பெருமாள் !!


பிரசித்தி பெற்ற சிவாலயமாக இக்கோயில் இருந்தாலும், 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான "நிலாத்துண்ட பெருமாள்" எனும் திவ்ய தேசமும் இந்த கோயிலில் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது. இக்கோயிலில் உள்ள, பிரகாரத்தில் ஆயிரம் கால் மண்டபமும் உள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், தமிழ்நாடு மட்டுமில்லாமல் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் வருகை புரிந்து வருகின்றனர். இக்கோவிலில் உள்ள மாமரம் மிகவும் விஷேஷமாக பார்க்கப்படுகிறது.


ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் எப்போது ?


பழமையும், வரலாற்று சிறப்புமிக்க இக்கோயிலில் 17 ஆண்டுக்கு பிறகு கும்பாபிஷேக திருப்பணி செய்ய தமிழக அரசு ரூ.18 கோடி நிதி ஒதுக்கியிருக்கிறது. கோயில் திருப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. எப்போது கோயில் திருப்பணிகள் நிறைவடைந்து கும்பாபிஷேகம் செய்யப்படும் என காஞ்சிபுரம் மட்டும் இல்லாமல் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் ஆவலுடன் காத்திருந்தனர். இந்தநிலையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் குடமுழுக்கு விழா வரும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.