ஏகாம்பரநாதர் திருக்கோயில் பங்குனி மாத திருக்கல்யாண  உற்சவம்

 

கோவில் நகரமாக விளங்கக்கூடிய காஞ்சிபுரத்தில் உள்ள பஞ்ச ஸ்தலங்களில் மண் ஸ்தலமாக விளங்கும் பிரசித்தி பெற்ற ஏலவார்க்குழலி உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயில் பங்குனி மாத திருக்கல்யாண  உற்சவம் நேற்று முன் தினம் கொடி ஏற்றத்துடன்  துவங்கியது. கொடியேற்றத்துடன் 14 நாள் உற்சவம் நடைபெற்று வருகிறது இதில் காலை மற்றும் மாலை வேலைகளில் பல்வேறு வாகனங்களில் ஏகாம்பரநாதர் மற்றும் ஏலவார் குழலி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.

 



 

நான்கு ராஜ வீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்

 

மூன்றாம் நாள் காலை இன்று ஸ்ரீ சோமாஸ்கந்தர் சிலையில் ஏகாம்பரநாதர் பூத வாகனத்தில்  எழுந்தருளி பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கோவிலின் அலங்காரம் மண்டபத்தில் காட்சியளித்தார். அலங்கார மண்டபத்தில் இருந்து புறப்பட்ட ஏகாம்பரநாதர் சங்கர மடம் வழியாக, நான்கு ராஜ வீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஸ்ரீ ஏகாம்பரநாதர் பூதவகனக்தில் வருவதை வழியெங்கும் பக்தர்கள்  தீபாரதனை செய்து வழிபட்டு வருகின்றனர்.



 

ஏகாம்பரநாதர் கோயில் தல வரலாறு

 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏகாம்பர நாதர் கோயில், பஞ்சபூத தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.  இந்தத் தலம் பஞ்ச பூதங்களில் ஒன்றான நிலத்தைக் குறிக்கிறது. இந்தக் கோவிலின் முக்கிய கடவுளான சிவன்பெருமான் ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயரிலும், அம்பிகை காமாட்சி அம்மன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோயிலில் தலவிருட்சம் என போற்றப்படும் மாமரத்தின் வயது 5000 ஆண்டுகள். இந்த மாமரத்தின் கீழ் உமையாள் தவம்  செய்ததாகவும், இம்மரத்தில் கனியும் மாங்கனிகள் நான்கு வித சுவையுடையவை என்றும் கூறப்படுகிறது.



 

விழாக்கள்

 

இந்தக் கோவிலில் தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும் ஆனித் திருமஞ்சனம், ஆடிக் கிருத்திகை,  ஆவணி மூலம், நவராத்திரி, பங்குனி  உத்திரம், சித்ரா பெளர்ணமி, வைகாசி விசாகம் போன்ற விழாக்களும் நடைபெறுகின்றன.