பொதுவாக இந்திய அளவில் தீபாவளி  சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வீட்டில் இருளை அகற்றி ஒளிபரப்பும் வகையில் விளக்குகள் ஏற்றப்படுகின்றன . அந்த வகையில் இந்த ஒவ்வொரு ஒளிவிளக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.


இன்று நேற்று அல்ல ,காலம் காலமாக இந்த தீபாவளி தினத்தில் வீடு முழுவதும் ஒளி ஏற்றப்பட்டு பிரகாசமாக தூய்மையாக வைக்கப்படுகிறது. ஆகவே இந்த தீபாவளி திருநாளில் நாம் வீடுகளில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும், ஏன் இந்த விளக்கு ஏற்ற வேண்டும் ,இதனால் நமக்கும் நமது குடும்பத்திற்கும் என்ன பலன் என பார்க்கலாம். பொதுவாக தீபாவளி ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகிறது முதல் நாளான தனதிரியோதசி என அழைக்கப்படும் தந்தேராஸ் அன்று மகாலட்சுமி தாயாருக்கும் குபேரருக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.


வீட்டை சுத்தப்படுத்தி ஒளி ஏற்றி இந்த முதல் நாள் பூஜைகள் நடத்தப்படுகின்றன.


பஞ்சாங்க கணிப்பின்படி அக்டோபர் மாதம் 22-ஆம் தேதி சனிக்கிழமை மாலை 06.02 மணிக்கு தன திரயோதசி தொடங்கி 23ஆம் தேதி மாலை 6.03 வரை நீடிக்கிறது. இந்த நேரத்தில் வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்கி வரலாம் என சொல்லப்படுகிறது. இந்து புராணங்களில், செல்வம் மற்றும் நல்ல ஆயுள் ஆரோக்கியத்தை பெற தீபாவளி மற்றும் தந்தேராஸ் ஆகிய நாட்களில் 13 தீபங்கள் ஏற்றப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


ஆகவே பாரம்பரியமாக ஏற்றப்படும் மண் விளக்குகளில் இந்த ஒளியை ஏற்றி வீடு முழுவதும் பரப்பினால் மிகவும் சிறப்பானது என கூறப்படுகிறது. இந்த ஒளி விளக்குகள் எதிர்மறை ஆற்றலை தடுத்து நேர்மறை ஆற்றலை வீட்டிற்குள் பரப்புகிறது. புராண பாரம்பரியங்களில் படி வீட்டில் உள்ளவர்களின் நல்ல ஆரோக்கியம் மற்றும் செல்வ செழிப்புக்காக இந்த 13 தீபங்களை ஏற்றி வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என கூறப்படுகிறது.


தந்தேராஸ் அல்லது 'தந்த்ரயோதசி' என்பது தீபாவளி கொண்டாட்டத்தின் முதல் நாளாகும். அன்றைய தினம் மொத்தம் 13 மண் அகல் விளக்குகளில் ஒளி ஏற்றி வைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கெட்ட தீய வினைகள் மற்றும் மரணத்தைத் தடுக்க முதலில் உங்கள் வீட்டிற்கு வெளியே குப்பை அகற்றும் இடத்தில் விளக்கை ஏற்றி வைக்க வேண்டும் என கூறப்படுகிறது


இரண்டாவது மண் விளக்கை நெய் ஊற்றி வீட்டின் பூஜை அறையில் வைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இது உங்களைச் சுற்றியும், வீடு முழுவதும் நேர்மறையான அதிர்வுகளைப் பரப்ப உதவுகிறது என நம்பப்படுகிறது.


மூன்றாவது மண் அகல் விளக்கை, நம் வாழ்வில் இல்ல செல்வ செழிப்பு ஆயுள் ஆரோக்கியம், அதிர்ஷ்டத்தை பெற , வீட்டில் லட்சுமி தேவியின் சிலை அல்லது புகைப்படத்தின் முன்  ஏற்றி வைக்க வேண்டும்.


நான்காவது அகல் விளக்கை உங்கள் வீட்டில் வைத்திருக்கும் தூய்மையான புனித துளசி செடியின் முன் ஏற்றி வைத்து வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் ஏற்படுவதோடு நன்கு சுபீட்சம் அடைவதற்கான வழிமுறைகள் பிறக்கும்.


 ஐந்தாவது அகல் விளக்கை வீட்டின் பிரதான நுழைவாயிலுக்கு வெளியே ஏற்றி வைக்க வேண்டும். இது உங்கள் வீட்டிலிருக்கும் கெட்ட சக்திகளை விரட்டி, நேர்மறை ஆற்றலை ஏற்படுத்துகிறது.


ஆறாவது அகல் விளக்கை கடுகெண்ணெய் ஊற்றி ஏற்ற வேண்டுமென கூறப்படுகிறது. இவ்வாறு கடுகெண்ணெய் ஊற்றி ஏற்றிய விளக்கை ஒரு அரச மரத்தின் கீழ் வைப்பது மிகவும் மங்களகரமானது என சொல்லப்படுகிறது. இது வாழ்விற்கு தேவையான சகல வளங்களையும் தருவதோடு செல்வம் மற்றும் எதிர்மறை சக்திகளை தடுக்க உதவும் என நம்பப்படுகிறது.


ஏழாவது அகல் விளக்கை உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள  கோவில் அல்லது நீங்கள் விரும்பும் எந்தக் கோவிலிலும் ஏற்றி வழிபடுவது சிறப்பு.


அடுத்து எட்டாவது அகல் விளக்கை வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் மற்றும் தீய சக்திகள் வெளியேற வீட்டில் குப்பை சேர்க்கும் இடத்தில் ஏற்ற வேண்டும்.


ஒன்பதாவது அகல் விளக்கை வீட்டின் கழிவறைக்கு வெளியே ஏற்றி வைக்க வேண்டும், இது  நேர்மறை சக்திகளை உள்ளீர்க்கவும், வாழ்க்கையில் செழிப்பை ஏற்படுத்தவும் உதவுவதாக நம்பப்படுகிறது.


அடுத்து பத்தாவதாக, வீட்டின் கூரை பகுதியில் பத்தாவது அகல் விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். இது முழு குடும்பத்தின் பாதுகாப்பை அதிகரிப்பதாக நம்பப்படுகிறது. 


பதினோராவது அகல் விளக்கை வீட்டில் உள்ள எந்த ஜன்னலிலாவது ஏற்றி வைக்கலாம். இது வீட்டினுள் நல்ல சக்திகளையும் நேர்மறை ஆற்றலையும் பரப்பும் என சொல்லப்படுகிறது.


பன்னிரண்டாவது அகல் விளக்கை ஏற்றி  உங்கள் வீட்டின் மேல் தளத்தில் வைக்க வேண்டும். இது குடும்பத்தில் உள்ளவர்களின் ஆரோக்கியமான நல்வாழ்க்கைக்கு  வழிகாட்டுகிறது.


பதின்மூன்றாவது அகல் விளக்கை  வீட்டில் உள்ள சந்து அல்லது குறுக்குவெட்டுகளில் ஏதேனும் ஒரு பகுதியில் வைக்க வேண்டும். இவ்வாறு ஏற்றும் போது வீட்டில் உள்ள வாஸ்து பிரச்சனைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.


ஆகவே இந்த தீபாவளி திருநாளில் வீட்டில் சம்பிரதாயபடி 13 மண் அகல் விளக்குகளை ஏற்றி சகல வளங்களையும் சுபிட்சத்தையும்  பெறுவோம் என நம்பப்படுகிறது