சபரிமலை ஐயப்பன் கோயில் என்பது மிகவும் புனிதமான இடமாக பக்தர்களால் கருதப்படுகிறது. கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருகிறார்கள். மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி சுமந்து மலையேறி பதினெட்டா படி கடந்து ஐயப்பனை காண்களையில் நம்முடைய துன்பங்கள் அனைத்தும் பறந்து போகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. 

Continues below advertisement


கன்னிசாமி - குருசாமி


சபரிமலைக்கு மாலை அணிந்து செல்வது கோடிக்கணக்கான பக்தர்களின் வழக்கமாக உள்ளது. பெரும்பாலான பக்தர்கள் கார்த்திகை மற்றும் மார்கழி மாதம் சீசன் காலத்தில் மாலை அணிந்து வழிபட செல்வார்கள். சிலர் ஒவ்வொரு தமிழ் மாதமும் நடை திறக்கப்படும் 5 நாட்களை கணக்கில் கொண்டு மாலை அணிவார்கள். சிறுவர்கள் தொடங்கி முதியவர்கள் வரை மாலை அணிந்து விரதம் இருந்து வழிபட்டு செல்கிறார்கள். இப்படியான சபரிமலைக்கு முதல்  முறை செல்பவர்கள் கன்னி சாமி என அழைக்கப்படுகிறார். அதேபோ 18 முறை சென்றவர் குருசாமி எனப்படுகிறார். 


குருசாமி என்பவர் யார்?


சபரிமலை யாத்திரை செல்லும்போது நாம் குருசாமியின் தலைமையில் தான் செல்ல வேண்டும் என்பது விதியாக உள்ளது. அவரின் வழிகாட்டுதல்கள் நாம் புனிதமான இந்த பயணத்தை சரியாக மேற்கொள்ள முடியும் என நம்பிக்கை உள்ளது. இப்படியான நிலையில் பாடகர் வீரமணி ராஜூ ஒரு நேர்காணலில் பேசும்போது, “சபரிமலைக்கு 40,50 போனவர்கள் எல்லாம் நான் குருசாமி என சொல்வார்கள். நம்ம யாருமே குருசாமி கிடையாது. அப்படி வருபவர்கள் யார் என்பதை மறைந்த பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியார் தெரிவித்துள்ளார். அதாவது முதல்முறை நாம் சபரிமலைக்கு செல்பவர்கள் கன்னிசாமி என சொல்லப்படுகிறார்கள். 18 முறை சென்றால் குருசாமி என கூறுகிறோம். ஆனால் அது கணக்கில் கொள்ள முடியாது. 


கன்னிசாமி முதல் தடவை சென்ற மாதிரி 18 முறை செல்ல வேண்டும். அதாவது ஒருபடி கடக்க 18 முறை செல்ல வேண்டும். அப்போது தான் கன்னி சாமியாக தகுதியைப் பெறுவாய். அப்படி 18 படிகளில் ஒவ்வொன்றுக்கும் என மொத்தம் 324 ஆண்டுகள் சென்றால் தான் குருசாமி ஆக முடியும். ஆனால் இயற்கைப்படி மனித குலத்தில் அது சாத்தியம் கிடையாது. அப்ப குருசாமி யார் என கேட்டால் அது ஐயப்பன் மட்டும் தான். இதுதான் குருசாமி தத்துவம். அதற்காக குருசாமியாக சிறப்பிக்கப்படுவர்களை நான் குறை சொல்லவில்லை. நாம் சபரிமலை யாத்திரை செல்ல கண்டிப்பாக குரு என்ற வழிகாட்டி தேவை. இத்தகைய குருசாமியை நாம் மாற்ற வேண்டிய காலக்கட்டம் வரலாம். ஆனால் ஐயப்பன் தான் என்றும் நிரந்தரமான குருசாமி” என தெரிவித்துள்ளார்.