அருள்மிகு குருபகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு நாளை  22ம் தேதி  சனிக்கிழமையன்று பெயர்ச்சி அடைகிறார். இதனை முன்னிட்டு  நவகிரகஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ஆலங்குடி  ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் நாளை குருப்பெயர்ச்சி விழா அதிவிமரிசையாக நடைபெறவுள்ளது. 

 

திருவாருர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற சிறப்புடையது. திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும். நவகிரகஸ்தலங்களில் அருள்மிகு குருபகவானுக்கு பரிகாரஸ்தலமாக விளங்கி வருகிறது.

 

விஸ்வாமித்திரர், அஷ்டதிகடபாலகர்கள், அகஸ்தியர், புலஸ்தியர், காகபுஜண்டர், சுகர்பிரம்ம மகரிஷி மற்றும் ஆதிசங்கரர் ஆகியோர் பூஜித்த திருத்தலம் ஆகும். அம்மையின் திருமணத்திற்கு வந்த திருமால், பிரம்மா, இலக்குமி, கருடன், ஐயனார், வீரபத்திரர் முதலானோர்  தம் பெயரால் லிங்கங்கள் நிறுவி பூஜித்துவழி பட்டத் தலம். முசுகுந்த சக்கரவர்த்தி, சுவாசனன் மற்றும் சுந்தரர் வழிபட்ட தலமாகும். திருஞானசம்பந்தரால் பதிகம் பெற்றது. அப்பர் அடிகளால் திருவீழிமிழலைத் திருத்தாண்டகத்தில் சேர்த்துப் பாடல் பெற்ற சிறப்புடையது. திருஞானசம்பந்தர் தமது பாடல்களால் இத்தலத்தை சிறப்பித்து இரண்டாம் திருமுறையில் பாடியுள்ளார். வரலாற்று சிறப்பு மிக்க இக்கோயிலில் வருடம் தோறும் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் நாளில் குருப்பெயர்ச்சிவிழா  அதிவிமரிசையாக நடைபெற்று வருகிறது.



 

இவ்வாண்டும் குருபகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு நாளை 22ம் தேதி  சனிக்கிழமை பெயர்ச்சி அடைகிறார். அன்றைய தினம் இக்கோயிலில் குருப்பெயர்ச்சி விழா அதிவிமரிசையாக நடைபெறவுள்ளது. இவ்விழாவையொட்டி குருபகவானுக்கு இலட்சார்ச்சனை விழா கடந்த 16 ம் தேதி  ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்கி ஏப்ரல் 20ம் தேதி வியாழக்கிழமை முடிய முதற்கட்ட லட்சார்ச்சனை நடைபெற்றது.

 

நாளை நடைபெறவுள்ள குருபெயர்ச்சி விழாவையொட்டி திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர்  சாருஶ்ரீ  உத்தரவின் பேரில் அரசின் பல்வேறு துறைகளும் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் பெண் போலீசார் உள்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அரசு போக்குவரத்துக்கழகம் வழக்கம் போல் சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது.  தமிழ்நாட்டிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால்  விரிவான  ஏற்பாடுகளை நாகப்பட்டினம் இணைஆணையர் க.ராமு உத்தரவின் பேரில், தக்கார் மற்றும் உதவி ஆணையர், செயல் அலுவலர் மணவழகன் ஆலோசனைப்படி  கண்காணிப்பாளர், செயல் அலுவலர் அரவிந்தன்  மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். மீண்டும் குருப்பெயர்ச்சிக்குப் பின் வரும் 27 ம் தேதி  வியாழக்கிழமை முதல் மே 1 ம் தேதி  திங்கள்கிழமை முடிய இரண்டாம் கட்ட லட்சார்ச்சனை  நடைபெறும். மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்வது உத்தமம். 



 

இதையொட்டி ஆலங்குடி குருபகவான் கோவிலில் குருபெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதனை நன்னிலம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் இலக்கியா மற்றும் வலங்கைமான் காவல் ஆய்வாளர் ராஜா ஆய்வு செய்தனர். குருபயர்ச்சி விழாவிற்காக கோவில் நிர்வாகம் சார்பில் நீண்ட தகரத்தால் ஆன பந்தல் அமைக்கப்படுகிறது. 47 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் நடைபெற உள்ளது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று குருபகவானை தரிசிக்க தடுப்புகள் அமைக்கப்படுகிறது. குறிப்பாக குரு பெயர்ச்சியை முன்னிட்டு குருபகவானின் தரிசனம் செய்ய திருவாரூர் மாவட்டம் மட்டுமன்றி தஞ்சை மயிலாடுதுறை திருச்சி சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவதை முன்னிட்டு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் மற்றும்  செயல் அலுவலர் உள்ளிட்ட கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.