விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 71 சிலைகள் அமராவதி மற்றும் காவிரி ஆறுகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கப்பட்டன. ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது, பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணி அமைப்புகள் உட்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து, மூன்று நாட்கள் வழிபாடு நடத்தி,  ஊர்வலமாக எடுத்துச் சென்று ஆற்றில் கரைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கரூர் மாவட்டம் முழுதும் பல்வேறு அமைப்புகள் மற்றும் தனியார்கள் சார்பில் 277 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. 143 சிலைகள் சுவாமி தரிசனம் செய்து, ஆறுகளில் கரைக்கப்பட்டன. செப்டம்பர் இரண்டாம் தேதி இந்து முன்னணி உட்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வந்த 71 சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.




இதன்படி, அரவக்குறிச்சி பகுதியில் 18 சிலைகளும், சின்ன தாராபுரம் பகுதியில் 18 சிலைகளும், வேலாயுதம் பாளையம் பகுதியில் 27 சிலைகளும், குளித்தலை பகுதியில் 8 சிலைகளும் அந்தந்த பகுதிகளில் உள்ள அமராவதி மற்றும் காவிரி ஆறுகளில் சுவாமி தரிசனம் செய்து, ஊர்வலமாக சென்று கரைக்கப்பட்டன. இந்த சிலை ஊர்வலப் பணியில்  2360 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கரூர் மாவட்டம் நொய்யல், மறவாபாளையம் சேமங்கி பெரியார் நகர், அதியமான் கோட்டை, பாண்டிபாளையம், பொன்னன்சத்திரம், பிரேம்நகர், பெருமாள் நகர், அம்மாபட்டி, தவிட்டுப்பாளையம், முருகம்பாளையம், முத்தனூர், நடையனூர், கரைப்பாளையம், புன்னம்சத்திரம, தவிட்டுப்பாளையம், நஞ்சை புகலூர், திருக்காடு துறை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்திகை முன்னிட்டு சுமார் 40க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் சார்பாக விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.




இந்நிலையில் வியாழக்கிழமை மாலை 6:00 மணிக்கு மேல் நொய்யல் சுற்று வட்டாரம் பகுதி மற்றும் க.பரமத்தி சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்கள் வைக்க வைத்திருந்த 11 விநாயகர் சிலைகளும், இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டிருந்த 27 சிலைகளும் என மொத்தம் 38 சிலைகள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்று பாலத்தில் இருந்து கிரேன் மூலம் சிலைகள் கரைக்கப்பட்டது.


அதேபோல் நொய்யல் சுற்று வட்டார பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டிருந்த 27 விநாயகர் சிலைகளை நேற்று மாலை சுமார் 5 மணிக்கு மேல் அனைத்து விநாயகர் சிலைகளும் வாகனங்களில் வைக்கப்பட்டு முக்கிய வீதிகளில் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று  தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றுப்பாலத்தில் இருந்து கிரேன் மூலம் விநாயகர் சிலைகளை தூக்கி காவிரி ஆற்றுத் தண்ணீரில் இரவு சுமார் 7 மணி முதல் தொடர்ந்து கரைக்கப்பட்டது.




விநாயகர் சிலை ஊர்வலத்தின் போதும், விநாயகர் சிலைகளை கரைக்கும் இடங்களிலும் வன்முறைகள் மற்றும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாத வகையில் திருச்சி சரக போலீஸ் ஐஜி சந்தோஷ் குமார் தலைமையில் கரூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (தலைமையிடம்) கண்ணன் மேற்பார்வையில்,  அரவக்குறிச்சி உட்கோட்ட துணை போலிஸ் சூப்பிரண்டு முத்தமிழ் செல்வன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் சப்-  இன்ஸ்பெக்டர்கள், போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசார் என ஏராளமானோர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.