முழு முதல் கடவுளாக விளங்குபவர் விநாயகர். இவர் அவதார தினமாக ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி கடைப்பிடிக்கப்படுகிறது. மிக எளிமையாக எல்லா இடத்திலும் அமர்ந்திருக்கும் தெய்வமாகவும், எளியோருக்கு இனியவராகத் திகழ்பவர் நம் விநாயகர். ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை நாடு முழுவதும் மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. வீடுகளில் மட்டுமல்லாமல், பொது இடங்களில் பலரும் கூடி பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு அதை நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கமாக உள்ளது.

மன்னர் சத்ரபதி சிவாஜியின் காலத்திலேயே விநாயகர் சதுர்த்தி விழா பிரபலமாகி விட்டாலும் நாம் பார்க்கும் விநாயகர் விழா கொண்டாட்டங்கள் மற்றும்  ஊர்வலங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் தலைவரான பாலகங்காதர திலகர் தான். 1893-ம் ஆண்டு "சர்வஜன கனேஷ் உத்சவ்" என்ற பெயரில் இவர் ஆரம்பித்து வைத்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களே இன்று வரை மக்கள் மிகப்பெரிய விழாவாக  கொண்டாடி வருகின்றனர்.





புராணப்படி அரக்கர்களின் கொடுமையில் இருந்து தங்களை காத்திட தவமிருந்து, சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டதன் பயனாக தடைகளை தகர்த்தெறியும் ஆற்றலுடன் சிவன் பார்வதியால் உருவாக்கப்பட்டவர் தான் விநாயகப் பெருமான். இவர் ஒரு ஆவணி மாத சதுர்த்தியன்று யானை முகத்தோடும், மனித உடலோடும் அரக்கன் கஜமுகாசுரனை அழித்து தேவர்களை மீட்டார். எனவே, அன்று முதல் இந்த தினத்தை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, கோவா ஆகிய மாநிலங்களில் கூடுதல் உற்சாகத்துடன் 10 நாட்கள் விநாயகர்  சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்தியா மட்டுமின்றி நேபாளம், அமெரிக்கா, மொரீசியஸ் உள்ளிட்ட நாடுகளிலும் இந்த விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

மகத்துவம் பெற்ற இந்த விநாயகர் சதுர்த்தியை ஒட்டி தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் விநாயகர் சிலைகள் கண்காட்சி மற்றும் சிறப்பு விற்பனை துவக்க விழா நடந்தது. தமிழ்நாடு அரசு நிறுவனமான பூம்புகார் விற்பனை நிலையத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கணபதி தரிசன கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.




இதில் பூம்புகார் உற்பத்தி நிலையங்கள் மற்றும் கை தேர்ந்த கைவினை கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள், பஞ்சலோகம், காகித கூழ், களிமண், கருங்கல், மாக்கல், பித்தளை, வெள்ளை உலோகம், கருப்பு உலோகம், நவரத்தினம், ஸ்படிகம், வெள்ளெருக்கு, மார்பிள் தூள், நூக்க மரம் போன்றவற்றில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் உள்ளன.

மேலும் தஞ்சாவூர் கலைத் தட்டுகள், தஞ்சாவூர் ஓவியங்களும் கண்காட்சியில் உள்ளது. இக்கண்காட்சியில் ரூ.75 முதல் ரூ.2 லட்சம் வரை மதிப்பிலான பொருட்கள் இடம்பெற்றுள்ளன. இக்கண்காட்சி வரும் 31-ம் தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறவுள்ளது. இக்கண்காட்சி மூலம் ரூ.5 லட்சத்துக்கு சிலைகள் மற்றும் கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யப்படவுள்ளதாக பூம்புகார் மேலாளர் டி.சக்திதேவி தெரிவித்தார்.