ஆண்டு தோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.


நாடு முழுவதும் இன்று இந்துக்களின் முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பக்தர்கள் பக்தி பரவசத்தோடு வழிபாடு நடத்தி விநாயகரை வணங்கி வருகின்றனர். விநாயகருக்கு அருகம்புல், எருக்கம்பூ மாலை அணிவித்து கொழுக்கட்டை, அவல் படையலிட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. 


முதற்கடவுள்:


எண்ணிய செயல் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் மாற வணங்கப்படுபவர் முழு முதற்கடவுளான விநாயகப் பெருமான். ஆண்டு தோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. கோயில்களில் பால், நெய், தேன், தயிர், சர்க்கரை, பஞ்சாமிர்தம் என விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து  அலங்கரித்து சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். பிள்ளையார் உருவங்களை களி மண்ணால் பிடித்தும், சிலைகள் நிறுவியும், மோதகம், சுண்டல் அவல், பொரி, பழங்கள் ஆகியவற்றை வைத்து அவரை வணங்கி மக்கள் மகிழ்கின்றனர். 


நாடு முழுவுதும் கொண்டாட்டம்:


விநாயகப் பெருமான் என்பவர், சிவன் மற்றும் பார்வதி தேவியின் மகன் மற்றும் அறிவு, செல்வம் மற்றும் புதிய தொடக்கங்களின் கடவுளாக போற்றப்படுகிறார். நாடு முழுவதும், குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, உத்தரபிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இந்த விழா மிகுந்த உற்சாகத்துடன் 10 நாட்களுக்கு மேல் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில்தான் விநாயகப் பெருமான் பிறந்தார் என்பது ஐதீகம்.




தும்பிக்கை:


அதேபோல் இன்று ஒவ்வொரு வீடுகளிலும் களிமண்ணால் செய்த பிள்ளையார் சிலையை வாங்கிச் சென்று மூன்று கால பூஜை செய்து விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, பழங்கள் என பல்சுவை விருந்தை படைத்து வணங்குவர். அந்த வகையில் இன்று ( செப்டம்பர் 07 ஆம் தேதி) பிள்ளையார் சதுர்த்தி மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 


அப்படி வீட்டிற்கு விநாயகர் சிலையை வாங்கும்போது மிக உன்னிப்பாக கவனிக்கவேண்டியது தும்பிக்கை ஆகும். விநாயகருக்கு அம்சமே அவரது தும்பிக்கை ஆகும். அந்த விநாயகரின் சிலையை வாங்கும்போது விநாயகரின் தும்பிக்கை இடதுபுறம் இருக்கும் வகையில் வாங்க வேண்டும். இடதுபுறம் தும்பிக்கை அமைந்த நிலையில் உள்ள விநாயகரை வணங்குவதால், நாம் செய்யும் செயலில் தெளிவு பிறக்கும்.


தேவையான பொருட்கள்: 


இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில் சந்தையில் விநாயகர் சிலை மட்டுமல்ல அவரை வழிப்பட தேவையான அனைத்து விஷயங்களும் விற்பனைக்கு வரும். அதாவது அருகம்புல், எருகம்பூ, மலர் மாலைகள், விளாங்கய், கம்பு, தோரணம், விநாயகர் குடை, பழ வகைகள், பொரி என அனைத்து பொருட்களும் இன்று விற்பனைக்கு வரும்.