விநாயகர் பெருமானின் பிறந்த நாளை விநாயகர் சதுர்த்தி என இந்துக்கள் கொண்டாடுகிறார்கள் . இது இந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கிய பண்டிகளில் ஒன்றாகும். விநாயகர் சதுர்த்தி ஆனது, நமது ஊர்களில் திருவிழாவாக   கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியானது 10 நாட்கள் விநாயகர் சிலையை வைத்து வழிபட்டு, கொண்டாடப்படுகிறது.


நமது ஊர்களில் உள்ள தெருக்களில் எங்கு பார்த்தாலும் விநாயகர் சிலையானது ஆங்காங்கே வைக்கப்பட்டு மேல தாளங்கள் இசைக்க,பாட்டு சத்தங்கள் நிறைந்திருக்க,விநாயகர் சதுர்த்தியானது மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த  பத்து நாட்களுக்கு பிறகு பக்தர்கள் விநாயகர் சிலைகளை எடுத்து வந்து வழிபட்ட பின்பு அதனை  நீர்நிலைகளில் கொண்டு கரைக்கின்றனர்.


இந்த விநாயகர் சதுர்த்தி அன்று  விநாயகர் சிலைகள்  விதவிதமான வடிவங்கள் மற்றும் வண்ண பூச்சிகளால் செய்யப்பட்டு ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும். இப்படி சிறப்பு மிக்க விநாயகர் சதுர்த்தியை, இந்த ஆண்டு சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில்,விநாயகர் சிலை செய்து அதனை விமர்சியாக கொண்டாடுவோம்.


இப்படி கொண்டாட்டத்திற்கு பயன்படும் விநாயகர் சிலைகள் களிமண்களை கொண்டு சந்தைகள் மற்றும் சிலை செய்யும் இடங்களில் செய்யப்படுகிறது.இந்த விநாயகர் சிலைகள் ஆனது வழிபாடு முடிந்த பின்பு நீர் நிலைகளில்  தான் அதிக அளவு கரைக்கப்படுகிறது. இங்குதான் சுற்றுச்சூழல் பிரச்சனை எழுகிறது. இதில் முழுக்க முழுக்க களிமண்ணால் செய்யப்படும் விநாயகர் சிலைகளானது, சுற்றுச்சூழலுக்கு எந்த விதத்திலும் பாதிப்பை தருவதில்லை.


ஆனால் வீதிகளில் வைக்கப்படும் மிகப் பெரிய அளவு விநாயகர் சிலைகள் ஆனது பிளாஸ்டிக் மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் கலர் வண்ண பூச்சிகள் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இத்தகைய விநாயகர் சிலைகள் திருவிழா முடிந்ததும் நீர் நிலைகளிலே அதிகம் கரைக்கப்படுகின்றன அவ்வாறு கரைக்கப்படும்போது நீர் நிலையில் உள்ள மீன்கள், அந்த மீன்களை உண்ணும் பறவைகள் மற்றும் நீர்வாழ் ஏனைய உயிரினங்கள் மற்றும் நுண்ணுயிரிகள் என அனைத்தும் இத்தகைய பிளாஸ்டிக் கள் மற்றும் கெமிக்கல்களால் பாதிக்கப்படுகின்றன.


இது மட்டுமல்லாது ஒருவேளை அந்த நீர் நிலை மக்களுக்கு வழங்கப்படும் குடிநீரைக் கொண்டிருக்கும் பட்சத்தில் மனிதர்களுக்கும் அது ஆகப்பெரிய பாதிப்பை உண்டு பண்ணுகிறது.  இதற்காக நாம் விநாயகர் சதுர்த்தி கொண்டாடாமல் தவிர்க்க முடியாது. ஆனால் மனிதர்களாகிய நம்மால் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் சுற்றுப்புற சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் தயாரிக்க முடியும். விநாயகர் சிலையை சுற்றுப்புற சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் எந்த முறையில் தயாரிக்கலாம் என்பதை நாம் இப்பொழுது பார்க்கலாம்.



1.களிமண் சிலைகள்


நமது முன்னோர்கள் காலம் காலமாக   களிமண்ணைக் கொண்டே விநாயகர் சிலைகளை செய்து வந்தனர். இப்பொழுது நாகரீகமானது வளர்ந்த பின்பு சிலைகளின்  அழகுக்காகவும் பளபளப்புக்காகவும் அட்டை, பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டர் ஆப்  பாரிஸ்  பயன்படுத்தி தயாரிக்கப்பட்டு வருகிறது. களிமண் கொண்டு விநாயகர் சிலை செய்யும் பொழுது அது எளிதில் கரையும் தன்மையும் சுற்றுச்சூழலுக்கு எவ்வித தீங்கையும் விளைவிக்காமல் இருக்கிறது. இதில் ரசாயனம் மற்றும் மக்காத பொருட்கள்  கலக்கப்படுவதில்லை. இதனால் இந்த நீரை பயன்படுத்தும் மீன்கள் பறவைகள் நுண்ணுயிர்கள் மற்றும் மனிதர்கள் யாருக்கும் எந்தத் தீங்கும் நேர்வதில்லை.விநாயகர் சிலையை செய்த பின்பு, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் உள்ள வண்ணங்களை நாம் அதில் பூசி மேலும் அழகு சேர்க்கலாம்


2. சாக்லேட் விநாயகர் சிலை


இப்பொழுது விநாயகர் சிலை  சிலையானது சாக்லேட் கொண்டு செய்யப்படுகிறது. இதனை கேட்கும் பொழுது நமக்கு ஆச்சரியமாக இருக்கலாம் .ஆனால் இந்த சாக்லேட் விநாயகர் சிலையானது எந்த வகையிலும் நமக்கும், நமது சுற்று சூழலுக்கு தீங்கு விளைவிக்காது. இதில் பயன்படுத்தப்படும் வண்ணங்கள் அனைத்தும் உண்ணக்கூடிய வண்ணங்களாகும்.  இதனை நாம் நீர் நிலையில் கரைப்பதற்கு பதிலாக ஒரு பால் சேமிக்கும் கொள்கலங்களில் கரைத்து, அனைவருக்கும் பிரசாதமாக அதை கொடுக்கலாம். இதனால் எந்த வித பாதிப்பும் கிடையாது.


3. விதைகளால் உருவான  விநாயகர் சிலை


நாம்  விநாயகர் சிலையை வழிபட்ட பிறகு, செடி போல் நடுவதை விட சிறந்தது இங்கே வேறு எதுவுமில்லை. பொதுவாக இந்த சிலைகள் செய்ய களிமண், மற்றும் மாட்டு எரு, மற்றும் மண்புழு உரம் மற்றும் இதர இயற்கை உரங்கள் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 
இதனை எளிதில் வளரும் வெண்டைக்காய், தக்காளி மற்றும் துளசி போன்ற தாவரங்களின் விதைகளால் இந்த சிலையானது செய்யப்பட்டுள்ளது. இந்த  விதைகளினால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை தண்ணீரில் மூழ்கடிப்பதற்கு பதிலாக, மண்ணுடன் ஒரு கொள்கலனில் வைக்கலாம்.  அதன் மீது தண்ணீரை ஊற்றி , வந்தால் இந்த சிலை ஆனது சிதைந்து , விதைகள் தரையில் முளைக்க ஆரம்பிக்கும். இதனால் நம் விநாயகர் சில நாட்களில் செழிப்பான செடிகளாக மாறுவார். இதன்  மூலம்,  பிள்ளையார் நம் வீட்டில் நிரந்தரமாக வசிப்பதோடு, ஆண்டு முழுவதும் காய்கறிகளையும் ,பழங்களையும் நமக்கு வரங்களாய் கொடுப்பார்.


4. செய்தித்தாள் விநாயகர் சிலை
பொதுவாக நம் வீட்டில் செய்தித்தாள் படிக்கும் பழக்கம் அதிக அளவில் உள்ளது .இதனால் நமது வீடுகளில் செய்தித்தாளானது எப்பொழுதும் இருக்கும்.  நாம் அந்த செய்தித்தாள்களைக் கொண்டு ஒரு விநாயகர் சிலையானது எளிமையாக உருவாக்கலாம். முதலில்,நாம் என்ன செய்ய வேண்டும் என்றால் பல்வேறு செய்தித்தாள் மற்றும்  கட்அவுட்களை எடுத்து, அவற்றை ஒரு பாத்திரத்தில் உள்ள தண்ணீரில் சில நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். இவை அனைத்தும் முழுமையாக ஊறிய பின்பு அதனை எடுத்து நன்றாக அரைத்து விழுதாக செய்து கொண்ட பின் விநாயகரின் ஒவ்வொரு  பாகத்தையும்  செய்யலாம். இத்தகைய பேப்பர் விநாயகரானது, சுற்றுச்சூழலுக்கு மாசுபாடு இல்லாமல் இருக்கிறது.


5. அரிசி மாவு விநாயகர்.
விநாயகர் சிலையை நம் வீட்டில் உள்ள அரிசி மாவை பயன்படுத்தியும் செய்ய முடியும் .நமது வீட்டில் உள்ள அரிசி மாவு மற்றும் சில மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தி இந்த சுற்றுச்சூழலுக்கு உகந்த புதுமையான விநாயகர் சிலையை நாம்  உருவாக்க வேண்டும்.இதனை  கொதிக்கும் எண்ணெய் மற்றும் தண்ணீருடன் இந்த கலவையை அரிசி மாவுடன் சேர்த்து நன்கு கிளறவும். 10 நிமிடங்களுக்கு, இந்த கலவையை மூடி வைக்கவும். அதன் பிறகு மாவை ஒரு உருண்டையாக உருட்டி, பல்வேறு உடல் பாகங்களாக வெட்டி, அதனை விநாயகர் போன்று வரிசைப்படுத்தவும். மிளகு, ஏலக்காய், மிளகாய் செதில்கள் போன்ற மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தி கண்கள், ஆடைகள் மற்றும் அணிகலன்களைச் சேர்க்கலாம்.நிறத்திற்கு  மஞ்சளைப் பயன்படுத்தலாம்.


 இப்படியாக பாரம்பரிய முறைப்படி களிமண்ணினாலும்  மற்றும் காலத்திற்கு ஏற்றார் போல அரிசி மாவு பேப்பர் மற்றும் விதைகளினாலும் விநாயகர் சிலைகளை செய்து சுற்றுச்சூழலை பாதுகாப்பதோடு நீர்நிலைகளையும் பாதுகாத்து நம் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு எடுத்துக்காட்டாக விநாயகரை வணங்குவோம்.