கிரிவலம் என்றாலே நம் அனைவருக்கும் திருவண்ணாமலை தான் நினைவுக்கு வரும். ஆனால் மலை மீது அமைந்திருக்கும் கோயில்களுக்கும் இன்று கிரிவலம் செல்லும் அளவுக்கு ஆன்மிகம் அடுத்தக்கட்டத்தை நோக்கி சென்று விட்டது. இப்படியான நிலையில் நாம் கிரிவலம் செய்யும்போது மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் பற்றிப் பார்க்கலாம்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில்
சிவபெருமானின் பஞ்சப்பூத தலங்களில் அக்னித் தலமாக அறியப்படுகிறது திருவண்ணாமலை. இறைவானான ஈசன் நெருப்பாக நின்று மலையாக குளிர்ந்த தல என்பதால் இதன் பெயரை உச்சரிக்கும்போது நமக்கு முக்தி கிடைக்கும் என நம்பப்படுகிறது. திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர், உண்ணாமலையம்மன் அருள்பாலித்து வருகின்றனர். உமையவளுக்கு இடப்பாகத்தை அளித்து ஈசன் அம்மையப்பராக இங்கு திகழ்கிறார்.
அப்படிப்பட்ட ஈசனையும், அம்பிகையையும் தரிசிப்பது எந்தளவு சிறப்பானோதோ, அதற்கேற்ப பலனை அருணாச்சலேஸ்வரை மனதார நினைத்து அவரது பெயரை உச்சரித்தவாறு கிரிவலம் செல்வது அலாதியானது. நம் நினைத்த காரியம் இரட்டிப்பாக நடைபெறும்.
நாம் கிரிவலம் செல்லும்போது உடல் நல ஆரோக்கியம் மேம்படுவதோடு, மனத்தூய்மையும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். இப்படியான கிரிவல பயணத்தை நாம் தொடங்கும்போது கோயிலின் அருகில் இருக்கும் பூத நாராயணரை வழிபட வேண்டும். அவர் தான் திருவண்ணாமலையில் காவல் தெய்வம். அவரை வணங்கினால் தான் நாம் எவ்வித இடையூறும் இல்லாமல் கிரிவலத்தை முடிக்க முடியும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. அதன்பின்னர் இரட்டை பிள்ளையாரை வணங்க வேண்டும். இதனையடுத்து கோயிலில் சென்று ராஜகோபுரத்தை வணங்கி விட்டு கிரிவலம் புறப்படம் வேண்டும்.
இதையெல்லாம் மனதில் கொள்ளலாம்
2,671 மீட்டர் உயரத்தில் 14 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட திருவண்ணாமலை கிரிவலப்பாதை உள்ளது.அதில் எண்கோண வடிவில் 8 சிவலிங்கங்கள் உள்ளது. அவை அக்னி லிங்கம், குபேர லிங்கம், இந்திர லிங்கம், யம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் ஆகியவை உள்ளது.
அதுமட்டுமல்ல அண்ணாமலை, விநாயகர், முருகன், ஆதி காமாட்சி அம்மன், லிங்கங்கள் என 99 கோயில்கள் கொண்ட தெய்வீக பாதையாக கிரிவலப் பாதை அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ரமண மகரிஷி, யோகி சுரத்குமார் ஆகியோரின் ஆசிரமங்கள் உள்ளது. அதேபோல் அண்ணாமலை அடிவாரத்தைச் சுற்றி வலம் வரும்போது மூலிகைச் செடி கொடிகளின் காற்றை சுவாசிக்கலாம். உடல் நலம் மேம்படுவதோடு மன குழப்பம் நீங்கும் என சொல்லப்படுகிறது.
முழுமுதற் கடவுளான சிவபெருமானை மனதார நினைத்து, அவருடைய திருநாமத்தை உச்சரித்து பொறுமையுடனும், பக்தியுடனும் நடந்து செல்ல வேண்டும். கிரிவலம் செல்லும்போது ஓடவோ, பேசவோ, சாப்பிடக்கூடாது. கிரிவலம் செல்ல பௌர்ணமி மட்டுமல்ல அனைத்து நாட்களும் உகந்த நாட்களும் தான். திருவண்ணாமலை நினைத்தாலே பாவங்கள் தீரும். சகல தோஷங்களும் அகலும் என்பது நம்பிக்கையாகும். கிரிவலம் செல்லும் முன், பின் என இரண்டு வேளைகளிலும் கோயிலினுள் சென்று வழிபடலாம். சிலர் முதலிலேயே வழிபட்டு செல்கிறார்கள். அதில் தவறில்லை. செய்யும் விஷயத்தை மிகவும் ஆத்மார்த்தமாக செய்ய வேண்டும் என சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.