கொங்கேழு ஸ்தலங்களுள் ஒன்றான காவிரி கரையின் மேற்கே அமைந்துள்ள திருப்பாண்டிக் கொடுமுடியில், பிரசித்தி பெற்ற  ஸ்ரீ மலையம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. மேலும் இங்கு  வடகயிலை நோக்கி தவக்கோலத்தில் அம்மன் காட்சி அளிக்கின்றார். இந்த கோவில் மகாகவி காளிதாசரால் பூஜிக்கப்பட்ட திருத்தலமாகவும் விளங்குகிறது .


இந்த கோயிலில்  ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ நாகநாத சுவாமி, ஆனந்த வல்லி, ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி, 
ஸ்ரீ பேச்சியம்மன்,  ஸ்ரீ கருப்பண்ண சுவாமி ஆகிய பரிவார தெய்வங்களும் இந்த திருத்தலத்தில் அமைந்துள்ளது. குழந்தை வரம் வேண்டி இங்கு வரும் பக்தர்கள் இந்த திருக்கோவிலில் அமைந்துள்ள  பேச்சியம்மனுக்கு தேன் அபிஷேகம் செய்து கோயிலில் தொட்டில் கட்டி வழிபட்டு செல்வது இங்கு சிறப்பாக உள்ளது.


இந்த திருத்தலத்தில் ஆகம , சிற்ப சாஸ்த்திர முறைப்படி கடந்த 2020 ஆம் ஆண்டு திருப்பணி வேலைகள் துவங்கப்பட்டு, கோயிலுக்கு புதிய மரத்தேர் இரும்பு அச்சு , இரும்பு சக்கரங்களுடன்  செய்து  வெள்ளோட்டம் நடந்து தற்போது ஆலயத் திருப்பணிகள் நிறைவு பெற்று, சைவ ஆதீன குருமகா சந்நிதானங்கள் முன்னிலையில்  கொடுமுடி ஆதீனம் சிவஸ்ரீ. தண்டபாணி குருக்கள் தலைமையில்  சிவாச்சாரியார்களை வைத்து கடந்த 2-ந் தேதி நான்கு கால யாகசாலை பூஜைகள், வேதபாராயணம் மற்றும் ஓதுவாமூர்த்திகளின் திருமுறை இன்னிசையுடன் தொடங்கியது.


இதன் பின்பு மஹா கும்பாபிஷேக விழாவானது கடந்த புதன்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுற்றியுள்ள பல கிராமங்களில் இருந்தும் கோயிலில் திரண்டனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து 48 நாட்கள் மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற்று வருகிறது.