உலகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்று அதிகம் பரவி வந்ததால் விநாயகர் சதுர்த்திக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நோய் தொற்று குறைந்து காணப்படுவதால் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் 2,000 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டது. மூன்றாம் நாளான இன்று சேலம் மாவட்டத்தில் பல பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் கரைக்கும் நிகழ்ச்சி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இந்து முன்னணி அமைப்பின் சார்பில் சேலம் மாவட்டத்தில் வைக்கப்பட்ட 55 விநாயகர் சிலைகள் கரைக்கும் நிகழ்ச்சி சேலம் எல்லை பிடாரியம்மன் திருக்கோயிலில் இருந்து தொடங்கியது. இந்த ஊர்வலத்தினை இந்து முன்னணி அமைப்பினர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் சேலம் எல்லை பிடாரியம்மன் கோயில் அருகே தொடங்கி வின்சென்ட், அஸ்தம்பட்டி, சின்னத்திருப்பதி வழியாக கன்னங்குறிச்சி ஏரி சென்றடையும். மற்றொரு ஊர்வலம் சேலம் மாநகராட்சி வள்ளுவர் சிலை அருகில் தொடங்கி சின்ன கடைவீதி, பெரிய கடைவீதி, ராஜகணபதி கோயில், இரண்டாம் அக்ரஹாரம், பட்டைக்கோவில், அம்மாபேட்டை வழியாக சென்று குமரகிரி ஏரியில் கரைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு சேலம் மாநகரம் காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோதா தலைமையில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



மேட்டூர் அணையில் இருந்து அதிக நீர் வெளியேற்றப்படுவதால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டாம் என சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் தெரிவித்துள்ளார். தடையை மீறி காவிரி ஆற்றில் இறங்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் தண்ணீர் குறைவாக உள்ள பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைத்து வருகின்றனர். 



சேலம் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ராஜ கணபதி திருக்கோவிலில் மூன்று நாட்கள் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வருகின்றது. விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு ராஜ கணபதிக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. இதனை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இந்த ஆண்டு முதல் தமிழ் மாதங்களில் முதல் நாள் அன்று ராஜகணபதி கோயிலில் உள்ள விநாயகருக்கு தங்க கவசம் அணிவிக்கப்படும் என திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தெருக்களிலும் வீதிகளிலும் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள், வீடுகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை அருகில் உள்ள நீர் நிலைகளில் சேலம் மாவட்டம் பொதுமக்கள் கரைத்து வருகின்றனர்.


சேலம் மாவட்டம் முழுவதும் அசம்பாவிதங்கள் இல்லாமல் தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி சேலம் மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்களில் தற்காலிக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் கலந்து கொண்டுள்ளதால் பாதுகாப்பு பணியில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.