தருமபுரி குமாரசாமிப்பேட்டையில் பெண்கள் மட்டுமே வடம் பிடித்த முருகன் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தைப்பூசத் திருவிழா
தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி சுவாமி நிலத்தில் புற்றுமுன் எடுத்தலும், கணபதி பூஜை, யாகசாலை பூஜைகளுடன் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதை தொடர்ந்து தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடும், பல்வேறு வாகனங்களில் சாமி திருவீதி உலாவும் நடைபெற்றது. தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பால் குட ஊர்வலமும், சாமி திருக்கல்யாண உற்சவமும், பொன்மயில் வாகனத்தில் சாமி திருவீதி உலாவும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை விநாயகர் தேரோட்டம் மற்றும் யானை வாகன உற்சவமும் நடைபெற்றது.
பெண்கள் வடம் பிடித்த தேர்
விழாவின் முக்கிய நாளான நேற்று காலை சிவசுப்பிரமணிய சாமி கோவில் தைப்பூச தேரோட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் எங்கும் காணாத வகையில் பெண்கள் மட்டுமே வடம் பிடித்து தேரை நிலை பெயர்த்தனர். இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி காலை பாரிமுனை நண்பர்கள் மற்றும் வாரியார் அன்னதான அறக்கட்டளை சார்பில் 10000 பக்தர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இதனை தி.மு.க. மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் வெங்கடேஸ்வரன், கோவிந்தசாமி, முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர். வெற்றிவேல், தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் எஸ்.ஏ. சின்னசாமி மற்றும் முக்கிய பிரமுகர்கள் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து மாலை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். தொடர்ந்து மாலை ஏழைகள் அன்னதான கமிட்டி சார்பில் 10000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் விழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவில் காலை முதல் இரவு வரை சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஞாயிற்றுக்கிழமை வேடர்பறி குதிரை வாகன உற்சவமும், திங்கட்கிழமை விழா கொடியிறக்கம் மற்றும் பூப்பல்லக்கு உற்சவமும், செவ்வாய்க்கிழமை சயன உற்சவமும் நடக்கிறது. விழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர்கள், செங்குந்தர் சமூகத்தினர் மற்றும் விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.