தென் திருப்பதி எனப்படும் தான்தோன்றிமலையில் புரட்டாசி பெருந்திருவிழா முதல் வார சனிக்கிழமையை முன்னிட்டு ஆலயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை ஒட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.




தான்தோன்றி மலை ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாதம் சனிக்கிழமை நாட்களில் அதிக அளவில் பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். இந்நிலையில் புரட்டாசி மாதம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய நிலையில், இன்று முதல் சனிக்கிழமை என்பதால் ஆன்மீக பக்தர்கள் தங்களது விரதத்தை தொடங்கியுள்ளனர்.




புரட்டாசி பெரும் திருவிழாவை முன்னிட்டு ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்ய கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் பெருமாளை தரிசனம் செய்தனர். ஆலயத்தை சுற்றியுள்ள பல்வேறு திருமண மண்டபங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. 




கோவில் நிர்வாகம் சார்பில் இலவசமாக முடி காணிக்கை செலுத்துவதற்காக தனி இடம் தயார் செய்யப்பட்டு அதில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சுமார் 500க்கும் மேற்பட்டோர் நேர்த்திக்கடன் ஆன முடி காணிக்கை செலுத்தினர். தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஆலயத்தில் புரட்டாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வருகின்ற 27 ஆம் தேதி கொடியேற்றமும், அதனைத் தொடர்ந்து அக்டோபர் 3ஆம் தேதி திருக்கல்யாணமும், அக்டோபர் 5 ஆம் தேதி திருத்தேர் பவனியும் நடைபெற உள்ளது.




150க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியிலும், சிசிடிவி கேமரா மூலம் கோவிலை சுற்றி பல்வேறு பகுதிகளிலும், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் தங்கள் உடைமைகளை குழந்தைகளையும் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.