ஒடிசாவின் பூரியில் நேற்று ரத யாத்திரை திருவிழா நடைபெற்றது. இதில் உலகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இந்நிலையில், இந்த ரத யாத்திரையில் பாலபத்ரரின் தேர் இழுக்கும்போது ஒரு பக்தர் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இன்னும் அடையாளம் காணப்படாத அந்த நபர் பூரி மாவட்ட தலைமையக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஒடிசா மாநில முதலமைச்சர் மோகன் சரண் மாஜி இறந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். 


மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பூரி மாவட்ட தலைமையக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு மாநில சுகாதார அமைச்சர் முகேஷ் மஹாலிங் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும் என மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கினார். 


இதுகுறித்து அமைச்சர் கூறுகையில், “இறந்தவரின் அடையாளத்தை கண்டறிய முயற்சித்து வருகிறோம். நான் தனிப்பட்ட முறையில் சுகாதார உள்கட்டமைப்பைக் கண்காணித்துள்ளேன். காயமடைந்தவர்களுக்கு முறையான சுகாதாரத்தை உறுதிப்படுத்தத் தயாராக இருக்குமாறு மருத்துவமனை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்தார். 






ஒடிசா மாநிலம் பூரியில் புகழ்பெற்ற ஜெகநாதர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ரத யாத்திரை மிக பிரம்மாண்டமாக நடைபெறும். ஜெகநாதரின் 12 யாத்திரைகளில் ரத யாத்திரை மிகவும் புனிதமாகவும் புகழ்பெற்றதாகவும் கருதப்படுகிறது. 


ரத யாத்திரையின் ஒரு பகுதியாக, தேர்களில் பஹண்டி சடங்கில் அலங்கரிக்கப்பட்ட பாலபந்திரர், ஜெகநாதர், சுபத்ரா ஆகிய மூன்று பெரிய சிலைகள் தனித்தனியாக வைக்கப்பட்டுள்ளன. பூரி நகரின் படா தண்டாவில் (கிராண்ட் ரோடு) சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தேர்களை இழுத்தனர். இந்த ரத யாத்திரை நேற்று மாலை 5.20 மணிக்கு தொடங்கியது. இந்த யாத்திரையை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, ஒடிசா ஆளுநர் ரகுபர் தாஸ், முதலமைச்சர் மோகன் சரண் மாஜி, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து யாத்திரையை ஆரம்பித்து வைத்தனர். எதிர்க்கட்சித் தலைவர் நவீன் பட்நாயக்கும் சாமி தரிசனம் செய்தார். 




(Source: PTI)


அதன்பின்னர்தான் பக்தர் தேரை பக்தி பரவசத்துடன் இழுத்தனர். முதலில் பாலபந்தர் தேரும், பின்னர் ஜெகநாதர் தேரும் தொடர்ந்து சுபத்ரா தேரும் இழுக்கப்பட்டது. இவை சலைகளில் அசைந்து அசைந்து வந்த காட்சி பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. இந்த மூன்று சிலைகளும் தெய்வங்களின் பிறப்பிடமாகக் கருதப்படும் குண்டிச்சா கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. அங்கு அவை பஹுதா யாத்திரை வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.