திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் முடிந்தவுடன் இந்திரன் தனது மகளாகிய தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து வைத்தார் என கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார் தெய்வானை திருமணப் படலத்தில் விரிவாக இதை விளக்கியுள்ளார். சிவபெருமானும் பார்வதியும் தங்கள் திருவடிகளில் வீழ்ந்து வணங்கிய மணமக்களை மார்புறத் தழுவி வாழ்த்துகின்றனர். முருகப்பெருமானின் திருமணத்தைக் கண்டுகளிக்க வந்த சிவபெருமானும், பார்வதிதேவியும் சோலை சூழ்ந்த இவ்வூருக்கு எழுந்தருளி தங்குகின்றனர். அவ்வமயம் உமையாள் சிவபெருமானிடம் வேதங்களின் விழுப் பொருளாகிய திருமந்திரத்தை உபதேசிக்குமாறு  வேண்டுகிறார். இறைவனிடம் அம்பிகை உபதேசம் பெற்ற திருத்தலமாதலின் இவ்வூர்  திருமந்திர நகர் என அழைக்கப்பட்டது.




இக்கோயிலை காசியப முனிவர், கவுதமர், பரத்துவாசர், அத்திரி போன்ற மா முனிவர்கள் வணங்கி அருள்பெற்றதாக தல புராணத் திரட்டுகள் கூறுகின்றன. தெய்வீக பயணமாக திருச்செந்தூர் வேலவனை வழிபட வந்த காசியப முனிவர் சோலை மிகுந்த இவ்வூரைக் கண்டு மகிழ்ந்து இங்கு ஒரு சிவலிங்கத்தை எழுந்தருளச்செய்து வழிபாடு நிகழ்த்தினார் என்றும் அதுவே சங்கர ராமேஸ்வரர் கோயில் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.




பாண்டிய மன்னராட்சியின் பிற்கால பாண்டிய மரபில் குறுநில மன்னரான சந்திரசேகர பாண்டியனின் புதல்வரான சங்கரராம பாண்டியன் கயத்தாறை தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்து வந்தார். மன்னர் குலம் தழைக்க, மனை விளங்க ஒரு மழலைச் செல்வம் இல்லாது வருந்தினார். மன்னனின் வருத்தத்தைக் கண்ட பெரியோர்கள் காசி போன்ற புண்ணிய திருத்தலங்களுக்குச் சென்று புனித நீராடி வருமாறு பணித்தனர். மன்னன் தனது பாரிவாரங்களுடன் புனித நீராடச்  செல்லும்போது இறைவனது குரல் அசாரீயாக ஒலித்துள்ளது. அப்போது வேந்தே நீ திருமந்திர நகரில் உள்ள, காசிக்கு இணையான வாஞ்சா புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி, அங்குள்ள சிவலிங்கத்தை வழிபட்டு வா என ஒலித்தது. இதையடுத்து மன்னன் தீர்த்தத்தில் நீராடியவுடன் அசாரீயாக மீண்டும் அரசே காசியப முனிவரால் ஸ்தாபிக்கப்பட்டு, பூசிக்கப்பட்ட சிவலிங்க பெருமானுக்கு அங்கு கோபுரத்துடன் கூடிய திருக்கோயில் எழுப்புவாயாக என்றும் கேட்டுள்ளது.அந்த  அசரீரியாக ஒலித்த இறைவனின் கட்டளைக்கு ஏற்ப மன்னரால் இத்திருக்கோயில்  கட்டப்பட்டது. இத்திருக்கோயிலில் உள்ள ‘வாஞ்சா புஷ்கரணி’ என்ற தீர்த்தத்தில் நீராடி  இறைவனை வழிபட்டு வந்தால் பிள்ளை பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும்  பிள்ளைபேறு வேண்டுவோர் இங்கு வந்து வழிபட்டால் குழந்தை வரம் தரும்  அற்புதத் திருத்தலமாக இவ்வாலயம் விளங்குகிறது. 




இக்கோயிலில் ஆண்டுமுழுவதும் பல்வேறு திருவிழாக்கள் சிறப்பாக நடந்துவருகின்றன. சித்திரை திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெகு விமர்ச்சையாக நடைபெற்றது. ஆண்டு தோறும் நடைபெறும் சித்திரை திருவிழா இந்த ஆண்டு திருவிழா கடந்த 24ஆம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.பத்து நாட்கள் தினசரி காலை மாலை நேரங்களில் சிறப்பு பூஜைகளும் சப்பர பவனியும் நடைபெற்றது.தொடந்து பத்தாம் திருநாளான முக்கிய நிகழ்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதையோட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமியும் அம்மாளும் எழுந்தருள திருத்தேரோட்டத்தை தமிழக  சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து துவக்கிவைத்தனர்.




அதனை  தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.  தேரை இழுக்கும் போது பக்தர்கள் சிவகோசங்களை எழுப்பினார்கள். தேரோட்டத்தின் போது பாண்டிச்சேரி விருதாச்சலம், கரூர் சிவ தொண்டர்களின் சிவா கைலாய சிவ பூதகன வாத்தியங்கள், தேவார இன்னிசை ,வேத பாராயணம், யானை ஆடும், குதிரை மயிலாட்டம், கோலாட்டம் ,சிலம்பாட்டம், கிராமிய கலை நிகழ்ச்சிகள் வான வேடிக்கைகள் மாணவ மாணவிகளை வீர விளையாட்டுகள் தேவாரம் குழுவினர் பஜனை ஆகியவையும் இடம்பெற்றன. ஆங்காங்கே நீர் மோர் குளிர்பதனங்கள் விநியோகிக்கப்பட்டன. தொடர்ந்து நான்கு ரத வீதிகளில் வலம் வந்து திருத்தேர் நிலையை அடைந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு தூத்துக்குடி ஊர் விழாக்கோலம் கொண்டிருந்தது. நிகழ்ச்சியில் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.