தமிழகத்தின் புகழ் பெற்ற ஆன்மிகவாதிகளில் ஒருவர் பங்காரு அடிகளார். இவர் மேல்வருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி கோயிலின் சித்தர் பீடத்தின் ஆன்மீக குருவாகவும் இருந்து வந்தார்.
காலமானார் பங்காரு அடிகளார்:
உலகின் பல இடங்களில் இவருக்கு பக்தர்கள் இருக்கின்றனர். அவர்கள் எல்லாம் இவரை ஆதிபராசக்தியின் மறுவுறுவமாக வழிபட்டு வந்தனர். அதோடு இவரை “அம்மா” என்றும் அழைத்து வந்தனர்.
இச்சூழலில் தான் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று (அக்டோபர் 19) திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழிந்தார். இதனிடையே, இவரது மறைவிற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தினர்.
மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேல்வருத்தூரில் வைக்கப்பட்டுள்ள இவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும், இவரது இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில், பல்வேறு கட்சித் தலைவர்களும், ஆன்மிகவாதிகளும், பக்தர்களும் காலை முதலே அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனிடையே நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (அக்டோபர் 20) அஞ்சலி செலுத்தினார்.
தனிப்பட்ட முறையில் பேரிழப்பு:
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பங்காரு அடிகளாரின் இறப்பை தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பாக தான் நான் பார்க்கிறேன். நாங்க ரொம்ப நெருக்கம். அப்பா - பிள்ளை போல எங்களுக்குள்ள ஒரு பாச பிணைப்பு இருந்துச்சு. அப்படிதான் நாங்க பழகுவோம். குறிப்பாக, அம்மா என் மேலே ரொம்ப அன்பா இருப்பாங்க. கர்ப்ப கிரகத்துக்குள்ள நாங்க வரக்கூடாது, கோயிலுக்குள் நாங்க எல்லாம் நுழையக் கூடாது என்றெல்லாம் இருந்த காலத்திலேயே, அதை அடித்து நொறுக்கி காட்டியவர் பங்காரு அடிகள்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஒருமுறை நான் அம்மா கோயிலுக்குள் போன பொழுது, அடிகளாரோட பேரன் அகத்தியன், என்னை கைய பிடிச்சு இழுத்து கர்ப்ப கிரகத்துக்குள்ள கூட்டிட்டு போய் பூஜை பண்ணுனு சொல்லிட்டான். அப்புறம் நான் தீபாராதனை காட்டி பூஜை பண்ணேன்.
சீமான் பகிர்ந்த தகவல்:
எனக்கும் அவருக்கும் இருந்த உரையாடலை சொல்றேன் கேளுங்க.டேய்.. நீ பேசி பேசியே நிறைய இளைஞர்களை உன் பக்கம் இழுத்துட்டியே டா. நான் என்னைக்காவது பேசி நீ பாத்துருக்கியா டா. நான் பேசவே மாட்டேன் டா" அப்படினு சொன்னாரு.
அதாவது அவர் பேசாமலேயே இத்தனை லட்சம் பேரை இழுத்துருக்கேன் பாத்தியானு சொல்லாம சொன்னாரு. அவரை எல்லாம் ஆன்மிக பேரறிஞர் என்று தான் சொல்ல வேண்டும்” என்று கூறினார்.
இச்சூழலில், பங்காரு அடிகளாரின் இறுதிச் சடங்கு இன்று மாலை 5 மணியளவில் முழு அரசு மரியாதையுடன் நடைபெற உள்ளது. தற்போது அரசு மரியாதை செலுத்து காவலர்கள் வருகை தந்துள்ளனர்.