தமிழ்நாட்டு மக்களால் பரவலாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஆயுத பூஜை. நவராத்திரியின் ஒன்பதாம் நாள் பூஜையாக வழிபடப்படும் ஆயுத பூஜை நாளை (அக்.4) கொண்டாடப்பட உள்ளது.


புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மகாளய அமாவாசை தினத்த்துக்கு அடுத்த நாள் தொடங்கி 9 நாள்கள் துர்கா தேவியை நினைத்து விரதமிருந்து வழிபட்டு நவராத்திரியை வட இந்தியாவில் கொண்டாடுகின்றனர். அதே நேரம் தமிழ்நாட்டில் வீடுகளில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டும், நவராத்திரியின் 9ம் நாளான ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, அதற்கடுத்த நாளான விஜய தசமி விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.


பொதுவாக ஆயுத பூஜை நாள்களில் தொழிலுக்கு பயன்படுத்தும் பொருள்களையும் அத்தியாவசியப் பொருள்களையும் வைத்து மக்கள் வணங்குவர். இதனால் அஸ்திர பூஜை என்றும் ஆயுத பூஜை அழைக்கப்படுகிறது.


இந்த நாள்களில் மக்கள் தங்கள் வீடுகள் தொடங்கி வாகனங்கள் வரை முழுமையாக தூய்மை செய்து பூஜை செய்து கொண்டாடுகின்றனர். தங்கள் தொழில் சார்ந்த கருவிகள் தொடங்கி சமையலறை சாதனங்கள் வரை வைத்து மக்கள் வழிபடுகின்றனர்.


மேலும் கல்வி அதிபதியான சரஸ்வதியை மக்கள் பூஜித்து வணங்குகின்றனர். சரஸ்வதி தேவியின் முன் புத்தங்கள், கல்வி சார்ந்த பொருள்களை வைத்து ஒவ்வொரு இல்லத்திலும் குழந்தைகள் தொடங்கி அனைவரும் வழிபட்டு மகிழ்கின்றனர்.


இந்த நாளில் குழந்தைகளுக்கு எழுத்து அறிவித்தும் எழுதப் பழகச் செய்தும், தமிழின் முதல் எழுத்தான அகரத்தை பழகச் செய்தும் அவர்களது கல்வி அறிவு மேம்பட மக்கள் வணங்குகின்றனர்.


இதற்கு அடுத்த நாளான அக்டோபர் 5ஆம் தேதி விஜய தசமி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினமே வட இந்தியா முழுவதும் தசரா பண்டிகை கோலாகமாகக் கொண்டாடப்படுகிறது.


நல்ல நேரம் (அக்.04) :


காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை


மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை


 






கௌரி நல்ல நேரம் (அக். 04):


மதியம் 1.45 மணி முதல் மதியம் 2.45 மணி வரை


மாலை 7.30 மணி முதல் மாலை 8.30 மணி வரை


நவமி நேரம்: அக்.03 மாலை 4.16 மணி முதல் அக்.04 பிற்பகல் 1.51 மணி வரை