பொதுவாக அமாவாசை நாள் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. அமாவாசை நன்னாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கமான ஒன்றாக இந்து மதத்தினரால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.



அமாவாசை நாள் சமையல்:


பிரசித்தி பெற்ற ஆவணி மாதத்திற்கான அமாவாசை நாள் இன்று வருகிறது. அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதுடன் வீட்டில் விரதம் இருந்து படையலிட்டு வணங்குவதும் வழக்கமான ஒன்றாக உள்ளது.


அவ்வாறு முன்னோர்களுக்காக படையலிட்டு வணங்கும் நாளில் சமையலில் வாழைக்காய் சேர்ப்பது அவசியமாக இருந்து வருகிறது. அமாவாசை நாளில் குறிப்பிட்ட காய்கறிகளில் மட்டுமே சமைப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது. அந்த காய்கறிகளில் வாழைக்காய் கட்டாயமாக இருப்பது ஏன்? என்பதை கீழே விரிவாக காணலாம்.


வாழைக்காய் கட்டாயம் ஏன்?


புராண காலத்தில் விசுவாமித்திரர் மற்றும் வசிஷ்டர் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. விசுவாமித்திரரைச் சந்தித்த வசிஷ்டர் அவரை தனது வீட்டிற்கு விருந்திற்கு அழைத்தார். அப்போது, விசுவாமித்திரர் வசிஷ்டரிடம் தான் வருவதாகவும், ஆனால் தனக்கு 1008 காய்கறிகளை கொண்டு உணவு சமைக்க வேண்டும் என்றும் கண்டிப்புடன் கூறிவிட்டார். இதைக்கேட்ட வசிஷ்டர் அதிர்ச்சியில் உறைந்தார்.


அதிர்ச்சியில் உறைந்த வசிஷ்டர், 1008 காய்கறிகளில் எப்படி சமைக்க முடியும்? அதை எப்படி தேடிப்பிடிப்பது? என்று அவரிடம் கேட்டுள்ளார். ஆனால், வசிஷ்டரின் மனைவி அருந்ததி, தங்களது விருப்பப்படி 1008 காய்கறிகளில் சமைத்து பரிமாறுகிறேன் என்று உத்தரவாதம் அளித்துள்ளார்.


1008 காய்கறிகள்:

இதையடுத்து, வசிஷ்டர் வீட்டிற்கு வந்த விசுவாமித்திரருக்கு 8 வாழைக்காய்களை வைத்த வசிஷ்டரின் மனைவி அருந்ததி, இலையில் பாகற்காய், பிரண்டை, பலாக்காய் பரிமாறியுள்ளார். பின்னர், தாங்கள் கேட்டது போல 1008 காய்கறிகளையும் பரிமாறியுள்ளார் என்றும் கூறியுள்ளார்.


இதைக்கேட்ட விசுவாமித்திரர் கடும் கோபம் அடைந்தார். அவருக்கு பொறுமையுடன் விளக்கம் அளித்த வசிஷ்டர் மனைவி அருந்ததி, சாஸ்திரத்தில் உள்ள ஸ்லோகத்தை எடுத்துக்கூறி பாகற்காய் 100 காய்களுக்கும், பிரண்டை 300 காய்களுக்கும், பலாக்காய் 600 காய்களுக்கும் சமமானது என்றும், அத்துடன் சேர்த்து 8 வாழைக்காய் வைத்துள்ளேன் மொத்தம் 1008 காய்கறிகள் என்று பதில் அளித்துள்ளார்.


இதைக்கேட்ட விசுவாமித்திரரும் அமைதியானார் என்று புராணங்களில் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, அமாவாசை நாளில் வீட்டில் சமைக்கும் உணவில் வாழைக்காய், பாகற்காய் பெரும்பாலும் இருக்கிறது. இதில் வாழைக்காய் எளிதில் கிடைக்கும் காய்கறி என்பதாலும் கட்டாயமாக அமாவாசை நாளில் சமைக்கும் உணவுகளில் இடம்பிடித்து விடுகிறது.