திருவண்ணாமலை (Tiruvannamalai News) பஞ்ச பூத தளங்களில் அக்னி தளமாக விளங்க கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நடைபெறும் முக்கிய உற்சவங்கள், கொடியேற்றத்துடன் தொடங்குவது மரபு. அண்ணாமலையார் கோவிலில் சித்திரை முதல் பங்குனி வரையில் 12 மாதங்களும் உற்சவம் நடைபெறும்.


அதேபோன்று ஆண்டுக்கு நான்கு முறை அண்ணாமலையார் கோவிலில் கொடியேற்றம் நடைபெறும். கார்த்திகை தீபத் திருவிழா உற்சவம், ஆனி பிரம்மோற்சவம் உற்சவம், மார்கழி மாதத்தில் உத்ராயண புண்ணியகாலம் உற்சவம் மற்றும் ஆடி பூரம் உற்சவம் ஆகியவற்றை நடைபெறும். அதில் மூன்று கொடியேற்றம் அண்ணாமலையார் சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றமும் ஒரு கொடியேற்றம்.


தங்க கொடிமரம்:


உண்ணாமுலையம்மன் சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் ஏற்றப்படும், ஜோதிட ரீதியாக ஆடி மாதம் சந்திரன் வீடான கடக ராசிக்கு சூரியன் வரும் காலத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். மேலும் சூரியன் தென் திசை நோக்கி இந்த மாதத்தில் தான் பயணத்தை தொடங்கும். அதன்படி இந்த மாதத்தில் வரும் ஆடி வெள்ளி, செவ்வாய் மற்றும் பௌர்ணமி, பூரண நட்சத்திர அமாவாசை, ஆடி 18 ஆகிய நாட்களில் அம்மன் கோவில்களில் வழிபடுவது புனிதமாக கருதப்படுகிறது.


 




அம்மன் சன்னதியில் ஆடிப்பூரம் பிரம்மோற்சவ கொடியேற்றம் 


இதனால்தான் கிராமப்புறங்களில் கூழ் வார்த்தால், பூ கரகம் எடுத்தல், தீமிதி திருவிழா வழிபாடுகள் நடைபெறும். ஆடிப்பூரம் பிறம்மோற்சவ தொடக்கமாக, இன்று ஸ்ரீ உண்ணாமுலை அம்மன் சன்னதி அருகே உள்ள தங்க கொடிமரத்தில் ஆடிப்பூரம் பிறம்மோற்சவ விழாவினை முன்னிட்டு அதிகாலையில், 4:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மன், உற்சவ மூர்த்திகள் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது. அதன்பிறகு விநாயகருக்கும் , பராசக்தி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகளும் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்தின் முன்பு எழுந்தருளினர். ஆடிப்பூரம் பிரம்மோற்சவம் பரணி நட்சத்திரம் கடக லக்னத்தில் இன்று காலை 6.09 மணி அளவில் தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது. 




அம்மனுக்கு வளைகாப்பு, தீமிதி திருவிழா 


அதனை தொடர்ந்து பத்து நாட்களுக்கு தினமும் காலையும் மாலையும் விநாயகர் மற்றும் பராசக்தி அம்மன் மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். விழாவை முன்னிட்டு, நாளை மாலை பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவமும், காமதேனு வாகனத்தில் அம்மன் திருவீதியுலாவும் நடைபெறும். மேலும், ஆடிப்பூரம் பிரமோற்சவ விழாவின்போது, பூரம் நடத்திரம் அமையும் நாளன்று தீமிதி விழா நடைபெறும்.


அதன்படி, முதல் நாளன்றே பூரம் நட்சத்திரம் அமைவதால், நாளை இரவு 11 மணியளவில் அம்மன் சன்னதி முன்பு தீமிதி விழாவும் நடைபெற உள்ளது. சிவன் கோயில்களில் தீமிதி விழா நடைபெறும் சிறப்பும் அண்ணாமலையார் கோயிலுக்கு மட்டுமே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து, வரும் 23ம் தேதி முதல் வரும் 31ம் தேதி வரை தினமும் காலை மற்றும் இரவில், அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் விநாயகர் மற்றும் பராசக்தி அம்மன் அலங்கார ரூபத்தில் மாட வீதியில் பவனிவந்து அருள்பாலிக்கின்றனர். கொடியேற்றத்தை காண 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.