தமிழ் மாதங்களில் மிகவும் முக்கியமான மாதம் ஆவணி மாதம் ஆகும். மாதங்களின் அரசன், சந்திர மாதம், சிங்க மாதம் என்று பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த மாதம் வரும் ஆகஸ்ட் 17ம் தேதி பிறக்கிறது.


ஆடி மாதத்தைப் போலவே ஆவணி மாதமும் பல சிறப்புகளை கொண்ட மாதம் ஆகும். இந்த ஆவணி மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாக அமைகிறது. இந்த வருடத்தில் ஆவணி மாதம் வரும் 17ம் தேதியான சனிக்கிழமை பிறக்கிறது. ஆவணி பிறக்கும் 17ம் தேதியான சனிக்கிழமை சிவபெருமானுக்கு உகந்த பிரதோஷ நன்னாள் ஆகும். சனிப்பிரதோஷத்தில் ஆவணி பிறப்பதே தனிச்சிறப்பாக பக்தர்களால் கருதப்படுகிறது.


பொதுவாக ஆவணி மாதத்தில் கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, ஓணம் பண்டிகை என மிகப்பெரிய பண்டிகைகள் கொண்டாடப்படுவது வழக்கம். நடப்பாண்டிலும் இந்த பெரிய பண்டிகைகள் ஆவணி மாதத்திலே கொண்டாடப்படுகிறது.


கிருஷ்ண ஜெயந்தி:


கிருஷ்ணர் அவதரித்த நாளாக கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி நன்னாள் வரும் ஆகஸ்ட் 26ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதாவது, ஆவணி மாதம் 10ம் நாளில் கிருஷ்ண ஜெயந்தி வருகிறது. இதை கோகுலாஷ்டமி என்றும் கூறுவார்கள். தமிழ்நாட்டை காட்டிலும் வட இந்தியாவில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். வீடுகளில் உள்ள குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடம் தரித்து பெற்றோர்களும், உறவினர்களும் வீடுகளில் நடக்க வைத்து அழகு பார்ப்பார்கள்.


விநாயகர் சதுர்த்தி:


முழு முதற்கடவுளாக இந்து மதத்தைச் சார்ந்தவர்களால் வழிபடப்படுபவர் விநாயகர். விநாயகர் அவதரித்த நாளே விநாயக சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி மிகவும் முக்கியமான பண்டிகை ஆகும். நடப்பாண்டிற்கான விநாயகர் சதுர்த்தி வரும் செப்டம்பர் மாதம் 7ம் தேதி வருகிறது. அதாவது, ஆவணி மாதம் 22ம் தேதி வருகிறது.


ஓணம் பண்டிகை:


மலையாள மக்களின் மிகப்பெரிய பண்டிகையாக ஓணம் உள்ளது. நடப்பாண்டிற்கான ஓணம் பண்டிகை வரும் செப்டம்பர் மாதம் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் 29ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. திருமாலால் வதம் செய்யப்பட்ட மகாபலி தனது ராஜ்ஜியத்திற்கு ஆண்டுக்கு ஒரு முறை வரும் நாளே ஓணம் பண்டிகை என்று புராணங்களில் கூறப்படுகிறது. மலையாள மக்கள் ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.


இது தவிர ஆவணி மாதத்தில் மற்றொரு சிறப்பு மிக்க நாளான மகா சங்கடஹர சதுர்த்தி வரும் 22ம் தேதி அதாவது ஆவணி மாதம் 6ம் நாளில் கொண்டாடப்படுகிறது. இதுதவிர ஆவணி அவிட்டம், ஆவணி மூலம் என பல சிறப்பு வாய்ந்த நாட்களும் வருகிறது.