தமிழ் மாதங்களில் மிகவும் முக்கியமான மாதம் ஆவணி மாதம். ஆடி மாதத்தைப் போலவே ஆவணி மாதமும் ஏராளமான சிறப்புகளை கொண்ட மாதம் ஆகும்.
அபூர்வ பிரதோஷத்தில் பிறந்த ஆவணி:
ஆடி மாதம் நேற்று நிறைவடைந்த நிலையில் ஆவணி மாதம் இன்று பிறந்துள்ளது. வழக்கமாகவே ஆவணி மாதம் சிறப்பு வாய்ந்த மாதம் ஆகும். இந்தாண்டு பிறந்துள்ள ஆவணி மாதம் கூடுதல் சிறப்புகளுடன் பிறந்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிறக்கும் அபூர்வ பிரதோஷத்தில் இந்த ஆவணி பிறந்துள்ளது.
வழக்கமாக, பிரதோஷமானது மாதத்திற்கு இரு முறை மட்டும் பிறக்கும். ஆனால், இந்த ஆகஸ்ட் மாதத்தில் 3 பிரதோஷங்கள் பிறக்கிறது. இன்று 2வது பிரதோஷம் ஆகும். இன்று சனிப்பிரதோஷம் என்பது கூடுதல் சிறப்பு ஆகும். இந்த மாதத்தில் பிறக்கும் 3வது பிரதோஷம் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி சனிக்கிழமையே பிறக்கிறது.
சிவபெருமானுக்கு உகந்த நாள்:
இன்று சனிப்பிரதோஷம் என்பதாலும், 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் பிரதோஷங்களில் ஒன்று என்பதாலும் இந்த நாளில் கோயிலுக்கு சென்று சிவபெருமானை வழிபடுவது தனிச்சிறப்பாக கருதப்படுகிறது. சிவாலயங்களில் காலை முதலே கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. மேலும், கோயில்களில் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடக்கிறது.
இந்த ஆவணி மாதத்தில்தான் கருங்குருவிக்கு உபதேசம், நாரைக்கு முக்தி, தருமிக்கு பொற்கிழி, வளையல் விற்ற லீலை, புட்டுக்கு மண் சுமந்தது, நரியை பரியாக்கியது போன்ற பல்வேறு லீலைகளை சிவபெருமான் நிகழ்த்தியதாக புராணங்கள் கூறுகிறது. இதனால், ஆவணி மாதம் சிவபெருமானுக்கு மிகவும் உகந்த மாதமாக திகழ்கிறது. மேலும், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, ஓணம் பண்டிகையும் இதே ஆவணி மாதத்தில்தான் கொண்டாடப்படுகிறது.
ஆடி மாத்தில் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் நடைபெறாமல் இருந்த நிலையில், ஆவணி மாதத்தில் திருமணம், புதுமனை புகுதல் உள்ளிட்ட பல்வேறு சுபகாரியங்கள் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.