இந்தியாவில் உறவு முறைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, அண்ணன் – தங்கை உறவு பந்தமானது உன்னதமான உறவாக கருதப்படுகிறது. இதன் காரணமாக திரைப்படங்களில் கூட அண்ணன் – தங்கை உறவை மையமாக கொண்ட திரைப்படங்கள் பல மொழிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
அண்ணன் – தங்கை உறவை போற்றும் விதமாக வட இந்தியாவில் ரக்ஷா பந்தன் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சமீபகாலமாக தமிழ்நாட்டிலும் ரக்ஷா பந்தன் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
ரக்ஷா பந்தன் எப்போது?
ரக்ஷா பந்தனானது வட இந்திய மாதமான ஷ்ரவண் மாதத்தில் வழக்கமாக கொண்டாடப்படுகிறது. அந்த மாதத்தில் வரும் பௌர்ணமி நன்னாளில் ரக்ஷா பந்தன் வழக்கமாக கொண்டாடப்படும். இந்தாண்டில் ஷ்ரவண் மாத பௌர்ணமி வரும் ஆகஸ்ட் 19ம் தேதி வருகிறது. இதனால், அன்றைய நாளில் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது.
ரக்ஷா பந்தனை முன்னிட்டு பெண்கள் தங்களது மூத்த சகோதரர்களுக்கு கைகளில் ராக்கி கயிறு கட்டிவிடுவது ரக்ஷா பந்தனில் வழக்கம் ஆகும். தங்களை பாதுகாக்கும் நபர் என்ற அர்த்தத்தை குறிக்கும் வகையில் ராக்கி கயிறு கட்டப்படுகிறது. மேலும், ரக்ஷா பந்தன் தினத்தில் சகோதரர்களுக்கு கையில் ராக்கி கயிறு கட்டுவதுடன், அவர்களது நெத்தியில் ஆரத்தி எடுப்பது வழக்கம்.
எந்த நேரத்தில் கொண்டாடலாம்?
ரக்ஷா பந்தன் கொண்டாட ஆகஸ்ட் மாதம் 1.30 மணி முதல் இரவு 9.08 மணி வரை உகந்த நேரம் ஆகும். அந்த 7 மணி நேர 48 நிமிடங்களே ரக்ஷா பந்தன் கொண்டாட உகந்த நேரமாக கருதப்படுகிறது.
ரக்ஷா பந்தன் ஏன் கொண்டாடப்படுகிறது?
பகவான் கிருஷ்ணரின் கரங்களில் சுதர்சன சக்கரம் இருக்கும். அந்த சக்கரத்தை பயன்படுத்தும்போது அவர் தனது விரலை வெட்டிக் கொண்டார். அப்போது, அந்த விரலில் ஏற்பட்ட காயத்தை திரௌபதி துணியால் வைத்து மறைப்பார். அப்போது, திரௌபதியிடம் எந்த சூழல் வந்தாலும் உனக்கு வரும் துயரில் இருந்து உன்னை பாதுகாப்பேன் என்று உத்தரவாதம் அளிப்பார்.
இதனால், கௌரவர்கள் திரௌபதியை சபையில் அவமானப்படுத்தும்போது கிருஷ்ணர் தோன்றி அவரை காப்பாற்றுவதாக மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை நினைவு கூறும் விதமாகவும், அண்ணன் – தங்கை உறவை போற்றும் விதமாகவும் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது.