தமிழ் மாதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதங்களில் ஆவணி மாதமும் ஒன்றாகும். ஆவணி மாதம் நேற்று பிறந்தது. ஆவணி மாதத்திலே மிகவும் முக்கியமான நாட்களில் ஆவணி அவிட்டமும் ஒன்றாகும்.


ஆவணி அவிட்டம் என்றால் என்ன?


பௌர்ணமி நாளும், அவிட்டம் நட்சத்திரமும் ஆவணி மாதத்தில் இணைந்து வருவதே ஆவணி அவிட்டம் ஆகும். இந்த நாள் ஆவணி மாதத்திலே மிகவும் முக்கியமான நாள் ஆகும். இந்த நன்னாளில்தான் வேதங்கள் தோன்றியதாக கூறப்படுகிறது.


மேலும், பெருமாள் ஹயக்ரீவர் அவதாரம் எடுத்து அசுரர்களிடம் இருந்து வேதங்களை மீட்டதும் இதே ஆவணி அவிட்ட நாளில் என்று புராணங்கள் கூறுகிறது. இதையே ஹயக்ரீவ ஜெயந்தி என்றும் கூறுகின்றனர்.


ஆவணி அவிட்டம் எப்போது?


ஆவணி அவிட்டம் நடப்பாண்டில் நாளை (ஆகஸ்ட் 19ம் தேதி) வருகிறது. நாளை அதிகாலை 3.07 மணி முதல் அதற்கு அடுத்த நாள்( 20ம் தேதி) வரை பௌர்ணமி திதி வருகிறது. நாளை காலை 9.09 மணிக்கு பிறகுதான் அவிட்டம் நட்சத்திரம் தொடங்கி 7.50 மணி வரை வருகிறது.


பூணூல் மாற்றும் நேரம்:


பொதுவாக ஆவணி அவிட்டத்தில் பூணூல் மாற்றுவதை பிரமாணர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். வேதங்களை மீட்ட நாள் என்பதன் காரணமாக இதை அவர்கள் கடைபிடிக்கின்றனர். இதனால், ஆவணி அவிட்டத்தில் மதியம் 12 மணி முதல் 1 மணி வரை பூணூல் மாற்றிக் கொள்ளலாம். இதனால், பிராமணர்கள் பெரும்பாலும் நாளை நீர்நிலைகளில் வேதங்கள் ஓதி பூணூலை மாற்றிக் கொள்வார்கள்.


ஆவணி அவிட்ட நன்னாளை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடத்தப்படும்.


ஆவணி மாதத்தில் ஓணம், விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி உள்ளிட்ட முக்கிய பண்டிகைகளும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.