தமிழ் மாதங்களில் ஆடி மாதம் மிகவும் தனித்துவம் வாய்ந்தது ஆகும். ஆடி மாதத்தின் ஒவ்வொரு நாளும் தனித்துவம் வாய்ந்த நாள் ஆகும். ஆடி மாதத்தில் வரும் ஆடிக்கிருத்திகை, ஆடிப்பூரம், ஆடிப்பெருக்கு, ஆடி பெளர்ணமி, ஆடி அமாவாசை என ஒவ்வொரு நாளும் சிறப்பு வாய்ந்த நாள் ஆகும்.
ஆடி மாத பௌர்ணமி:
நடப்பாண்டிற்கான ஆடி மாதம் கடந்த 17ம் தேதி பிறந்தது. ஆடி மாதத்தின் முதல் வெள்ளி இன்று பிறந்தது. இதையடுத்து, அம்மன் கோயில் உள்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
ஆடி மாதத்தில் வரும் பெளர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். இந்த சூழலில், ஆடி மாதத்தின் பௌர்ணமி ஜூலை 21ம் தேதியான நாளை மறுநாள் வருகிறது. பௌர்ணமி திதியானது 20ம் தேதியான நாளை மாலை 4.51 மணிக்கு தொடங்குகிறது. ஆனால், ஒரு நாளில் சூரியன் உதிக்கும்போது என்ன திதி உள்ளதோ அந்த திதியே அந்த நாள் முழுவதும் கணக்கில் கொள்ளப்படும்.
கிரிவலம் எப்போது செல்ல வேண்டும்?
அந்த வகையில், 21ம் தேதி சூரியோதயத்தின்போது பெளர்ணமி திதி இருப்பதால் நாளை மறுநாளே ஆடி மாத பெளர்ணமியாக கணக்கில் கொள்ளப்படுகிறது. பொதுவாக, பௌர்ணமி மற்றும் அமாவாசை தினத்தில் தமிழ்நாட்டின் பிரபல கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கிரிவலம் வருவது காலங்காலமாக நடைபெற்று வருகிறது.
ஆடி பெளர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். நாளை மறுநாள் பெளர்ணமி என்றாலும் நாளை இரவு முதலே பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். பக்தர்கள் நாளை மாலை 6 மணி முதல் நாளை மறுநாள் மாலை 5.20 மணி வரை கிரிவலம் செல்வதற்கு உகந்த நேரம் ஆகும்.
சிறப்பு பேருந்துகள்:
பொதுவாக, பௌர்ணமி நாட்கள் சிவபெருமான், பெருமாள், அம்பிகை, முருகன் ஆகியோருக்கு சிறப்புடையதாக கருதப்படுகிறது. அதேசமயம், ஆடி மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தில் முழு முதற்கடவுள் என கூறப்படும் விநாயகரை வழிபடுவது சிறப்பானது என்று கூறப்படுகிறது.
ஆடி மாத பௌர்ணமியில் சிவபெருமானுடன், விநாயகரையும் சேர்த்து வழிபடுவது தனிச்சிறப்பாக கருதப்படுகிறது. ஆடி வெள்ளி, பௌர்ணமி என்று அடுத்தடுத்து சிறப்பு வாய்ந்த நாட்கள் வருவதால் திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து ஆடி பெளர்ணமியை முன்னிட்டு 50 ஏ.சி. பேருந்துகள் இயக்கப்படுகிறது.