Aadi Pooram 2024: மாதம் முழுவதும் ஆன்மீக மணம் கொண்ட மாதமாக ஆடி மாதம் உள்ளது. ஆடி மாதத்தில் மிகவும் முக்கியமான நாட்களில் ஒன்றாக ஆடிப்பூரம் உள்ளது.


ஆடிப்பூரம் என்றால் என்ன?


ஒவ்வொரு மாதத்திலும் பூர நட்சத்திரம் வருவது வழக்கம். ஆனால், ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரம் தனித்துவமானது ஆகும். இந்த ஆடிப்பூர நட்சத்திரத்திலே உமாதேவி அவதரித்தாக கூறப்படுகிறது. மேலும், இந்த ஆடிப்பூர நன்னாளிலே பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் அவதரித்தாகவும் கூறப்படுகிறது.


இதன் காரணமாக ஆடிப்பூரமானது சைவம் மற்றும் வைணவம் என இரண்டு தலங்களிலும் கொண்டாடப்படுகிறது. அனைத்து அம்மன் கோயில்களிலும், பெருமாள் கோயில்களிலும் ஆடிப்பூரம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.


ஆடிப்பூரம் 2024 எப்போது? | When is Aadi Pooram 2024 


நடப்பாண்டிற்கான ஆடிப்பூர நன்னாள் நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. அதாவது, ஆகஸ்ட் 7ம் தேதி ஆடிப்பூர திருநாள் கொண்டாடப்படுகிறது. பூர நட்சத்திரம் நாளை மாலை 6.42 மணிக்கு தொடங்குகிறது. இந்த பூர நட்சத்திரமானது நாளை அதாவது 7ம் தேதி இரவு 9.03 மணி வரை உள்ளது.


ஒரு நாளில் சூரிய உதயத்தின்போது உள்ள நட்சத்திரமே கணக்கில் கொள்ளப்படும் என்பதால் ஆடிப்பூரம் நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது.


களைகட்டும் கோயில்கள்:


ஆடிப்பூர நன்னாள் அனைத்து கோயில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படும். இதையடுத்து, கோயில்களில் சிறப்பு வழிபாடும், பூஜைகளும் நடைபெறும். அம்மன் கோயில்களில் அம்மனுக்கு வளைகாப்பு நடத்தப்படுவது வழக்கம். இந்த நாளில் கோயில்களில் நடைபெறும் பூஜையில் பங்கேற்பது சிறப்பாக கருதப்படுகிறது.  மேலும், வைணவத் தலங்களில் ஸ்ரீரங்கநாதன் – ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறும்.


வைணவ கோயில்களிலும் அம்மன் கோயில்களிலும் நடைபெறும் திருக்கல்யாணத்திலும், வளைகாப்பிலும் பக்தர்கள் பங்கேற்பது சிறப்பு என்று கூறப்படுகிறது. ஆண்டாள் திருக்கல்யாணத்திலும், அம்மன் வளைகாப்பிலும் பங்கேற்றால் திருமணத்தடை நீங்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும், அம்மனுக்கு நடத்தப்படும் வளைகாப்பில் வழங்கப்படும் வளையல்களை அணிவதால் திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்றும், குழந்தைப் பேறு இல்லாத பெண்களுக்கு குழந்தை பிறக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.


ஆடிப்பூரம் நாளை மறுநாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு அனைத்து கோயில்களும் களைகட்டி காணப்படுகிறது. திருச்சி ஸ்ரீரங்கநாதர் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில் என பெரிய கோயில்களில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகளவில் காணப்படும் என்பதால் இங்கு முன்னேற்பாடுகள் வலுவாக செய்யப்பட்டுள்ளது.