தமிழ்நாட்டில் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதங்களாக மக்களால் கொண்டாடப்படுவது ஆடி மாதம் ஆகும். அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதமான ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் பக்தர்கள் குவிவது வழக்கம். நடப்பாண்டிற்கான ஆடி மாதம் வரும் 17-ந் தேதி பிறக்க உள்ளது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் உள்ள அம்மன் கோயில்களில் எல்லாம் பக்தர்கள் திரளாக சென்று வழிபடுவார்கள்.


கலச வழிபாடு:


ஆடி மாதம் முதல் நாள் உங்கள் வீட்டின் அருகில் உள்ள அம்மன் கோயிலுக்கோ அல்லது பிரசித்தி பெற்ற அம்மன் கோயிலுக்கோ சென்று வழிபடுவது சிறப்பு ஆகும். உங்கள் குலதெய்வம் எதுவாக இருந்தாலும் உங்கள் ஊரிலே உள்ள அம்மனே உங்களை பாதுகாப்பதால் உங்கள் ஊரில் உள்ள அம்மன் கோயிலுக்கு சென்று வழிபடுவது முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.


ஆடி மாதம் முதல் நாள் சிலர் கலசம் வைத்து அம்மனை வீட்டிற்கு அழைப்பார்கள். அது எவ்வாறு என்பதை கீழே காணலாம்.


அம்மனை கலசம் வைத்து அழைப்பதற்கு முன்பாக உங்கள் வீட்டை முழுவதும் சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக, பூஜையறையை மிகவும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். பூஜையறையில் உள்ள சாமி படங்களை சுத்தமாக துடைக்க வேண்டும்.


அன்றைய தினம் பெண்கள் காலையிலே எழுந்து மஞ்சள் பூசி குளித்துவிட்டு, மஞ்சள் நிற புடவையை அணிந்து கொள்ள வேண்டும். பின்னர், பூஜையறையில் இருக்கும் சாமி படங்களுக்கும் மஞ்சள் குங்கும பொட்டு வைத்து பூக்களால் அலங்காரம் செய்து பூஜைக்கு தயார் செய்ய வேண்டும்.


 கலசம் தயார் செய்வது எப்படி?



  • கலசம் நிறுத்துவதற்காக ஒரு பித்தளை அல்லது செம்பு சொம்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.

  • அந்த சொம்பில் நல்ல தண்ணீரை நிரப்ப வேண்டும்.

  • பின்னர், சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து, பன்னீரையும் ஊற்ற வேண்டும்.

  • இதையடுத்து, சொம்பில் ஒரு கைப்பிடியளவு வேப்பிலை இட வேண்டும்.

  • பின்னர், அந்த தண்ணீரில் எலுமிச்சம்பழத்தை போட வேண்டும்.

  • அந்த சொம்பில் மா இலை வைத்து தேங்காய் வைக்க வேண்டும்.


இப்போது, அம்மனை அழைப்பதற்கான கலசம் தயார் ஆகிவிட்டது.


பின்னர், ஒரு வாழை இலையில் பச்சரிசியை இட்டு, அதை இலையில் பரப்பி விட வேண்டும். ஏற்கனவே நாம் தயார் செய்து வைத்த கலசத்தை அந்த பச்சரிசியின் மேல் வைக்க வேண்டும்.


அந்த பச்சரிசியின் மேல் வைத்த கலசத்தை வணங்கி ஓம் சக்தி… ஓம் சக்தி.. என்ற நாமத்தை அம்மனை நினைத்து 108 முறை ஓம் சக்தி நாமத்தை உச்சரிக்க வேண்டும். பின்னர், சர்க்கரை பொங்கலை நெய்வேத்தியமாக வைத்து தீபாரானை காண்பிக்க வேண்டும். இப்போது, உங்கள் பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம்.


3 நாட்கள் பூஜை:


அம்மனை வீட்டிற்கு அழைத்து வழிபட்ட கலசத்தை 3 நாட்கள் வீட்டிலே வைத்து வழிபட வேண்டும். 3 நாட்களும் அம்மனை வணங்கி நிவேதனம் வைக்க வேண்டும். மூன்றாவது நாள் பூஜை நிறைவு பெற்ற பிறகு கலசத்தில் இருந்த தண்ணீரை எடுத்து செடி அல்லது கொடிகளுக்கு ஊற்ற வேண்டும்.


கலசத்தில் இருந்த எலுமிச்சம் பழத்தை  கால் படாத இடத்தில் போட வேண்டும். மேலும், கலசத்தில் இருக்கும் மா இலை, வேப்பிலை அல்லது பூக்கள் ஆகியவற்றையும் கால் படாத இடத்தில் போட வேண்டும். வாழையிலையில் பரப்பி வைக்கப்பட்டுள்ள பச்சரிசியை எடுத்து சமைக்க பயன்படுத்த வேண்டும்.


கலசம் வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. கலச வழிபாடு செய்ய முடியாதவர்கள் மனதார அம்மனை நினைத்து வழிபட்டால் போதும்.