சமயபுரம் மாரியம்மன் கோவில் இதிகாச, புராண காலத்தில் உருவானதாக கூறப்பட்டாலும் கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்பாக தோற்றுவிக்கப்பட்டு இருக்கலாம் என வரலாற்று தகவல்கள் கூறுகின்றன. திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து சுமார் 15 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது சமயபுரம் மாரியம்மன் கோவில். தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் முதன்மையானது என்ற பெருமைக்குரிய இக்கோவில் வருவாயில் பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு அடுத்த இடத்தில் உள்ளது. இங்கு வீற்றிருந்து வேண்டுவோருக்கு வேண்டிய வரங்களை கொடுத்து, உலக உயிரினங்களை காத்து அருள் பாலித்து வரும் அம்பாளின் அழகே தெய்வீகமானது. எட்டு கைகளுடனும், கழுத்தில் தலை மாலை அணிந்து சர்ப்பக்கொடியுடன், ஐந்து அசுரர்களின் தலைகளை தன் காலால் மிதித்து சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் அழகை கண்டால் மனம் அமைதி அடையும் என்பர். மேலும் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வெள்ளி, ஞாயிறு, செவ்வாய் போன்ற தினங்களிலும், அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களிலும் அம்மனை தரிசனம் செய்வதற்காகவும், செல்வ செழிப்போடு குடும்பம் விளங்கவும் வேண்டிக்கொண்டு, நோய் நொடியில்லாத வாழ்க்கை அமையவும், பக்தர்கள் பாத யாத்திரையாகவும், கார், வேன் போன்ற வாகனங்களிலும், ஆயிரக்கணக்கானோர் சமயபுரம் வந்து அம்மனை தரிசனம் செய்வது வழக்கம் ஆகும்.
Continues below advertisement
குறிப்பாக ஆடிமாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் ஆடிமாத 2 வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு காலையிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரத்திற்கு வருகை தர தொடங்கினர். பொதுமக்கள் பலர் கட்டண வரிசைகளிலும், பொது தரிசன வரிசையிலும், நீண்ட வரிசையில் நின்று அம்மனை பக்தியுடன் வணங்கி சென்றனர். மேலும் நெய்தீபங்கள் ஏற்றியும், கோவிலின் நுழைவு வாயிலில் தேங்காய் உடைத்தும், ஏராளமான பெண்கள் தரையில் விழுந்தும் வணங்கினர். சில பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் பொருட்டு குழந்தையை கரும்பு தொட்டிலில் சுமந்து வந்தனர். மேலும் அக்னி சட்டி ஏந்தியும், முடி காணிக்கை செலுத்தியும் சாமி தரிசனம் செய்தனர்.பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து துறை சார்பில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து இருந்து சமயம்புரம் மாரியம்மன் கோவிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும் பாதுகாப்பு பணியிலும், பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணியிலும் சமயபுரம் காவல் ஆய்வாளர் தலைமையில் போலீசார், மாரியம்மன் கோவில் பணியாளர்களும் ஈடுபட்டனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.