ஆடி மாதம் அமாவாசை நாளன்று முக்கிய நதிக்கரையில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். குறிப்பாக இந்த ஆண்டு இரண்டு அமாவாசைகள் வந்ததால் முதல் அமாவாசையான கடந்த 17 ஆம் தேதி நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், சேரன்மகாதேவி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தாமிரபரணி நதிக்கரைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.  முக்கிய அமாவாசையான இரண்டாவது அமாவாசை இன்று என்பதால் காலை முதலே பொதுமக்கள் முக்கிய நதிக்கரையில் கூடி தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். இதனால் காலை முதலே பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் இருந்து வருகிறது..  


குறிப்பாக  நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் நெல்லை மாவட்டம் மட்டுமின்றி தென்மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடி, எள் அரிசி மாவு உள்ளிட்டவற்றை வைத்து முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்து வழிபட்டு வருகின்றனர். அதே போல மாநகர பகுதியான நெல்லை குறுக்குத் துறை ஆற்றங்கரை பகுதிகளில் இன்று அதிகாலையில் இருந்தே பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர். பாபநாசம் கோவில் படித்துறைகள், கல் மண்டபங்கள் உள்பட கோவிலை சுற்றி ஆங்காங்கே பல்லாயிரக்கணக்கானோர்  குவிந்துள்ளதால் அம்பை காவல் சரகத்திற்குட்பட்ட சுமார் 100 -க்கும் மேற்பட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அம்பை, சேரன்மகாதேவி, தென்காசி பகுதிகளை சேர்ந்த தீயணைப்பு துறையினர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.




பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்  கொடுத்துவிட்டு ஆற்றில் புனித நீராடிவிட்டு கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கமாக வைத்துள்ளனர். இதனால் பாபநாசம் பாபநாசர் கோவில் நடை அதிகாலையிலேயே திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் ஆராதனை நடைபெற்றது. இங்கும் பொதுமக்கள் சிவனை தரிசித்து செல்வதால் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. இதேபோல் அம்பை சுற்றுவட்டார பகுதியிலுள்ள ஆம்பூர் கடனாநதி, கடையம் ராமநதி, அம்பை, கல்லிடைக்குறிச்சி தாமிரபரணி கரைகளிலும் ஏராளமானவர்கள் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்தனர்.




அதே போல பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கும் ஒவ்வொரு வருடமும் ஆடி அமாவாசை திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம், இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழா கடந்த 6 -ந் தேதி கால்நாட்டுதலுடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவை முன்னிட்டு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்பட தென்மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழிகத்தின் பல்வேறு மாவட்டங்களில்  இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்தனர்.  முன்னதாக அங்கு தங்கியிருக்க 5 நாட்கள் மட்டுமே மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுத்த நிலையில் குடில் அமைத்து தங்கியிருக்கும் பக்தர்களும் ஆடி அமாவாசையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி விட்டு பொங்கலிட்டு படையல் வைத்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதையொட்டி பாதுகாப்பு பணியில் சுமார் 600 போலீசார், தீயணைப்பு மீட்பு துறையினர், வருவாய் துறையினர், தன்னார்வலர்கள் உள்பட பல்வேறு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பக்தர்களின் மருத்துவ வசதிக்காக மருத்துவ கல்லூரி மாணவிகள் இலவச மருத்துவ முகாமும் நடத்தி வருகின்றனர்.