கரூரில் நெரூர் காவிரி ஆற்றங்கரையில் ஆடி அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு ஏராளமானோர் தர்ப்பணம் செய்தனர்.
மாதந்தோறும் அமாவாசை எனும் புண்ணிய தினம் வரும். மாதாமாதம் அமாவாசை வந்தாலும், ஒரு ஆண்டில் மூன்று அமாவாசைகள் மிக முக்கியமானவை. தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை ஆகிய மூன்று அமாவாசை தினங்களிலேனும் மறக்காமல், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி இன்று ஆடி அமாவாசை என்பதால் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நீர்நிலைகள், கடற்கரைகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
தை, ஆடி, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை தினங்களில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு நீர்நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இதனால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி ஆடி அமாவாசையான இன்று காவிரி ஆற்றுக்கு சென்று தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். கரூர் மாவட்ட காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் நெரூர், மாயனூர், வாங்கல் உள்ளிட்ட ஆற்றங்கரையில் பொதுமக்கள் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
அப்போது அங்கு வந்த பலரும் தங்களது மூன்று தலைமுறை முன்னோர்களின் பெயரை கூறி தர்ப்பணம் செய்தனர். அதன்பின்பு அவர்கள் பூஜை செய்து பிண்டங்களை காவிரி ஆற்றில் விட்டு முன்னோர்களை வணங்கி சென்றனர். பின்னர் அவர்களின் வீடுகளுக்கு வந்ததும் முன்னோர்களின் படத்தை வைத்து அவர்களுக்கு பிடித்தமான இனிப்பு, காரம், பழங்கள் உள்ளிட்டவற்றை படையல் இட்டு வழிபாட்டில் ஈடுபட்டனர்.