சோமவார அமாவாசையை ஒட்டி கச்சபேஸ்வரர் கோயிலில் உள்ள அரச மரத்தடியில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் வேண்டுதல் செலுத்தி வருகின்றனர்.
சோமவார அமாவாசை (somavara amavasai )
காஞ்சிபுரம் (Kanchipuram News): திங்கட்கிழமையன்று வரும் அமாவாசை (somavara amavasai) பெண்கள் அரச மரத்தை சுற்றி வந்து வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஒவ்வொரு அமாவாசை அன்றும் தாய், தந்தை இழந்தவர்கள் தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது, அன்னதானம் செய்வது வழக்கம். அதுவும் குறிப்பாக திங்கட்கிழமையன்று, வரும் அமாவாசை அன்று திருமணம் ஆகாத பெண்கள் மற்றும் திருமணம் ஆகி குழந்தை பேறு வேண்டி இருக்கும், பெண்கள் அரச மரத்தை சுற்றி வருவது வழக்கமாக உள்ளது. அரச மரத்தின் கீழ் உள்ள விநாயகர் மற்றும் நாகர் களை மஞ்சள் குங்குமம் வைத்து எலுமிச்சை மற்றும் தேங்காயில் தீபமேற்றி அரசமரத்தை சுற்றி வருவார்கள்.
ஆடி மாத சோமவார அமாவாசையான இன்று காஞ்சிபுரம், கச்சபேஸ்வரர் கோயிலில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள், பெண்கள் நாக சிலைக்கு பூஜை செய்து, அரச மரத்தை சுற்றி வந்தனர். சோமவார அமாவாசை மிகவும் விசேஷ நாளாக கருதப்படுகிறது. திங்கட்கிழமையில் வரும் அமாவாசையன்று, நாக சிலைக்கு பூஜை செய்து, அரச மரத்தை, சுற்றி வந்தால் கன்னி பெண்களுக்கு திருமணம் கைக் கூடும் என்பது நம்பிக்கை.
மேலும், குழந்தை பேறு பாக்கியம் கிடைப்பதற்கும், நாக தோசம் உள்ளவர்களும் ஆடி மாத சோம வார அமாவாசையான இன்று காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில், அரச மரத்தடியில் உள்ள நாக சிலைகளுக்கு, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பெண்கள் பூஜை செய்தனர். பூஜை செய்த பின் அரச மரத்தை வலம் வந்து வேண்டுதல் செலுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் வரலாறு ( kanchipuram kachabeswarar temple )
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் வளாகத்துக்குள் இரண்டு சிவன் கோயில்கள் அமைந்திருப்பது வித்தியாசமானது. 10 ஆம் நூற்றாண்டு தண்டியலங்காரத்தில் "கனல் மழுவன் கச்சாலை எம்மான்' என்ற மேற்கோள் பாட்டு எடுத்துக்காட்டப் பட்டுள்ளதால், பல்லவர் காலம் முதல் இத்திருக்கோயில் இருந்திருக்கிறது. ஆலயத்தில் அமைந்துள்ள திருக்குளத்தின் பெயர் இட்ட சித்திக் தீர்த்தம் ஆகும். இக்குளத்தில் மூழ்கி குளிப்பவர்களுக்குச் சிவபெருமான் திருவருள் பாலிப்பார்.
இத்தீர்த்தக் குளத்தைக் கண்டவர்களும், தன் உடம்பில் இத்தீர்த்தத்தை தெளித்தக் கொண்டவர்களுக்கும், மூழ்கிக் குளிப்பவர்களுக்கு அறம், பொருள், இன்பம் மற்றும் வீடு பேறு போன்ற உறுதிப் பொருளை அடைவார்கள் என்றும் சிவஞான முனிவர் அருளியுள்ளார். இந்த இட்ட சித்தி தீர்த்தக் குளத்தில் ஞாயிற்றுக் கிழமை முழுகினால் குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பிறந்திடும், மனைவி அமையாதவர்களக்கு நல்மனைவி அமைந்திடும், நோயில் துன்புறும் மக்கள் நோய் தீர்ந்து அவர்களின் ஆயுள் கெட்டிப்படும், கல்வி அறிவைப் பெறுவர்.
மேலும் , பொன் பொருள் இல்லாதவர் அனைத்துச் செல்வமும் பெற்றுச் சிறப்புடன் வாழ்வர் மற்றும் பதவி வேலை இல்லாதவர் பணியையும் பெற்று வாழ்வார்கள், என்று மாதவச் சிவஞான முனிவர் அவர்கள் திருக்குளத்தைக் குறித்து சிறப்பித்துக் கூறியுள்ளார்.