ஆடி மாதம் என்றாலே இந்து கோயில்களில் திருவிழாக்கள் களைக்கட்டும், கோயில்களில் பல்வேறு சிறப்பு வழிபாடுகளும் பக்தர்கள் மேற்கொள்வார்கள். குறிப்பாக கிராமப்புற கோயில்களில் தீமிதி, காவடி எடுத்தல், பால்குட ஊர்வலம், பொங்கல் வைத்தல், கிடாவெட்டு, முளைப்பாளி எடுத்தல் என பல்வேறு வகையான வழிபாடுகள் நடைபெறும். அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அபயாம்பிகை உடனாகிய மாயூரநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இக்கோயில் தேவாரப் பாடல் பெற்ற பெருமைக்குரிய கோயிலாகும். பார்வதி தேவி மயில் உருவம் எடுத்து சிவபெருமானை பூஜித்த பெருமைக்குரிய தலமாகும். இத்தகைய பல்வேறு சிறப்புக்குரிய இவ்வலயத்தில், அபயாம்பிகை அம்பாளுக்கு ஆடிப்பூத்தை முன்னிட்டு, இன்று சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, முறத்தில், கண்ணாடி, மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, வளையல் ஆகிய மங்கள பொருட்களை வைத்து படையலிட்டு அம்மனுக்கு பூரம் கழிக்கும் வழிபாடு நடைபெற்றது.
தொடர்ந்து அம்மனுக்கு மஹாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் ஆடிப்பூர அம்மனுக்கு 5008 வளையல்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு முறத்தில் ரவிக்கை துண்டு, கண்ணாடி, சீப்பு, வளையல்கள் ஆகியவை வைத்து பிரசாதம் வழங்கப்பட்டது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial
என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.