கோவையில் உள்ள சவுடாம்பிகை அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் ரத்தம் சொட்டச் சொட்ட கத்தி போடும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.


கோவை ராஜ வீதி பகுதியில் ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும், நவராத்திரி மற்றும் விஜயதசமியை முன்னிட்டு திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு திருவிழா, கடந்த பத்து நாட்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் விஜயதசமியை முன்னிட்டு, கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கத்தி போடுதல் நிகழ்ச்சி இன்று நடந்தது. 




கத்தி போடுதல் என்பது தேவாங்கர் இன மக்களால் மட்டுமே செய்யப்படும் ஒரு சிறப்பு கலாச்சார சடங்கு நிகழ்வு ஆகும். இதில் பங்கேற்கும் ஆண்கள் புனித வாளால் "தீசுக்கோ, வேசுக்கோ” என கூறிக்கொண்டே தங்களை காயப்படுத்திக் கொள்வது வழக்கம். பூமார்க்கெட் பகுதியில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் இந்தக் கத்தி போடும் திருவிழா ஊர்வலம் துவங்கி, ராஜ வீதியில் உள்ள சவுடாம்பிகை அம்மன் கோவில் வரை நடந்தது. இந்த ஊர்வலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து கலந்து கொண்ட பக்தர்கள் ”வேசுக்கோ,  தீசுக்கோ”  என்று பாடிக் கொண்டும் ஆடிக்கொண்டும் கத்தியால் கைகளில்  வெட்டிக் கொண்டே அம்மனை அழைத்தபடி வந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.


இதனால் அந்த பக்தர்களின் உடலில் ரத்தம் வழிந்து ஓடியது. அந்த வெட்டுக் காயங்களின் மீது திருமஞ்சனப் பொடியை  வைத்துக் கொண்டு, ஆடிக்கொண்டே சென்றனர். இந்தப் திருமஞ்சன  பொடியை வைத்தால் மூன்று நாட்களில் காயம்சரியாகிவிடும் என்பது  பக்தர்களின் நம்பிக்கை. பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபாடு நடத்தினர்.


வித்யாரம்பம் நிகழ்ச்சி


விஜயதசமி நாளன்று கல்வி, கலைகள் என எதைத் தொடங்கினாலும் வெற்றியுடன் முடியும் என்பது நம்பிக்கை. இதனால் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை விஜயதசமி அன்று பள்ளிகளில் சேர்ப்பது வழக்கம். மேலும் பல்வேறு கோவில்களில் 'வித்யாரம்பம்' நடைபெறும். குழந்தைகளின் கை பிடித்து, பரப்பி வைத்திருக்கும் நெல்லில், ’அ’ என்ற எழுத்தை எழுத கற்று கொடுப்பது வழக்கம்.




இதன் படி விஜயதசமி தினமான இன்று கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் வித்யாரம்பம் எனப்படும் எழுத்தறிவித்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் வந்து கல்விப் பணியினை தொடங்கினர். இந்த நிகழ்வில் ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் வந்து கலந்து கொண்டனர். பச்சரிசியில் குழந்தைகளின் கைகளை பிடித்து, ‘அ’ என்ற எழுத்தை எழுதி தங்கள் குழந்தைகளுக்கு கல்விப் பணியைத் துவங்கினர். இதையொட்டி அக்கோவிலில் சிறப்பு வழிபாடும் நடத்தப்பட்டது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண