தஞ்சாவூர்: விநாயகர் சதுர்த்தியை ஒட்டி தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் 695 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாநகரில் 80 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதில் இன்று மாலை பேராவூரணி, மல்லிப்பட்டினம் பகுதிகள் உட்பட மாவட்டத்தில் சில பகுதிகளில் 175 சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்படுகிறது.

Continues below advertisement

ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக கொண்டாடுவது வழக்கம். அதன்படி நடப்பாண்டில் இந்த விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

இதையடுத்து தஞ்சை மாவட்டம் முழுவதும் 695 விநாயகர் சிலையும், தஞ்சாவூர் மாநகரில் 85 விநாயகர் சிலைக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 6க்கும் மேற்பட்ட இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Continues below advertisement

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பொதுமக்கள் தங்களது வீடுகளில் களி மண்ணால் ஆன விநாயகர் சிலைகளை சொந்தமாக செய்தும், விலை கொடுத்து வாங்கியும் பின்னர் அதற்கு திரவிய பொடி, மஞ்சள் பொடி, சந்தனம், பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்து பின்னர் அதற்கு சிறப்பு பூஜைகள் செய்வது வழக்கம். மேலும் விநாயகருக்கே உரிய சிறப்பு பிரசாதமான கொழுக்கட்டை மற்றும் சுண்டல் செய்து படையலிட்டும் வழிபாடுகள் நடத்தினர். இதற்காக ஒரு அடி உயரம் முதல் 10 அடி உயரம் வரையில் பல்வேறு உயரங்களில், பல்வேறு வகையான விநாயகர் சிலைகள் விற்பனைக்காக தயாரிக்கப்பட்டு இருந்தது.

இதுபோன்று தயாரிக்கப்படும் சிலைகள் விலை கொடுத்து வாங்கப்பட்டு பின்னர் விநாயகர் சதுர்த்திக்கு 3 நாட்களுக்கு முன்னதாகவும், விநாயகர் சதுர்த்தி அன்றும் பக்தர்கள் மூலம் அந்த சிலையானது பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பின்னர் நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. ரூ. ஆயிரம் முதல் 15 ஆயிரம், 50 ஆயிரம் ரூபாய் வரை சிலைகள் தயாரிக்கப்படுகிறது.

ரசாயனம் கலந்த சிலைகளை கரைப்பதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அவ்வாறு சிலைகள் வைக்கப்பட்டால் பறிமுதல் செய்யப்படும் என்றும் மாவட்ட நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விநாயகர் ஊர்வலம் அமைதியான முறையில் நடைபெறமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் ஊர்வலத்தை முடிக்க வேண்டும் என போலீசார் தரப்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள மார்க்கெட் பகுதிகளில் விநாயகர் சிலை, பொரிகடலை, வாழைத்தார், வாழை இலை தோரணங்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அதிராம்பட்டினம் மல்லிபட்டினம் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் இன்று 175 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெள்ளை விநாயகர் கோயில் திருத்தரோட்டம்

கும்பகோணம் அருகே பிரசித்தி பெற்ற வெள்ளை விநாயகர் திருக்கோயிலில் இன்று திருத்தரோட்டம் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

கும்பகோணம் அருகே பிரசித்தி பெற்ற வெள்ளை விநாயகர் கோயில் என போற்றப்படும் திருவலஞ்சுழி ஸ்வேத விநாயகர் திருக்கோயில் விநாயக சதுர்த்தி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வாணி கமலாம்பிகா சவேத விநாயகர் எழுந்தருள தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.

இவ்வாண்டு இவ்விழா கடந்த 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமிகள் திருவிழா நடைபெற்று விழாவின் முக்கிய நிகழ்ச்சியான விநாயகர் சதுர்த்தி நாளான இன்று காலை தேவேந்திர பூஜையும் அதனை தொடர்ந்து வாணி கமலாம்பிகா ஸ்வேத விநாயகர் எழுந்தருள திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தும் தேரில் உள்ள சாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.