Fluffy Pancake Recipe : பஞ்சுபோன்ற பேன்கேக் வேண்டுமா? அப்போ இந்த ரெசிபியை பாலோ பண்ணுங்க!
தேவையான பொருட்கள் : முட்டை - 4, பால் - 7 மேசைக்கரண்டி காய்ச்சி ஆறவைத்தது, வெண்ணிலா எசென்ஸ் - 1 தேக்கரண்டி, மைதா மாவு - 6 மேசைக்கரண்டி, பேக்கிங் பவுடர் - 1/4 தேக்கரண்டி , உப்பு - 1 சிட்டிகை , சர்க்கரை - 4 மேசைக்கரண்டி, சமையல் எண்ணெய்
செய்முறை: முதலில் முட்டையின் மஞ்சள் கரு மற்றும் வெள்ளை பாகத்தை தனி தனியாக பிரிக்கவும். அடுத்து முட்டையின் வெள்ளை பாகத்தை பிரிட்ஜில் வைக்கவும். பிறகு முட்டையின் மஞ்சள் கருவை பீட் செய்து அதனுடன் காய்ச்சி ஆறவைத்த பால், வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கலந்து விடவும்.
அடுத்து மைதா மாவு, பேக்கிங் பவுடர், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து விடவும். பிரிட்ஜில் வைத்த முட்டையின் வெள்ளை பாகத்தை எடுத்து பீட் செய்து, சர்க்கரையை சிறிது சிறிதாக சேர்த்து பீட் செய்யவும். பின்பு பீட் செய்த வெள்ளை பாகத்துடன், மஞ்சள் கரு கலவையுடன் சிறிது சிறிதாக சேர்த்து மெதுவாக கலந்து விடவும்
அடுத்து, பேனை சூடாக்கி எண்ணெய் தடவவும். அதிகமாக உள்ள எண்ணெய்யை துடைத்து எடுக்கவும். பேன்கேக் கலவையை சிறிது சிறிதாக ஊற்றி, பேனின் ஓரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றவும். பின்பு பேனை மூடி குறைந்த தீயில் 2 நிமிடம் வேகவிடவும்.
அடுத்து பேனை திறந்து சிறிதளவு பேன்கேக் கலவை, ஓரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேனை மூடி குறைந்த தீயில் 2 நிமிடம் மீண்டும் வேகவிடவும். பிறகு பேன்கேக்கை மறுபுறம் திருப்பி சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேனை மூடி குறைந்த தீயில் 2 நிமிடம் மீண்டும் வேகவிடவும்.
பேனில் இருந்து கேக்கை எடுத்து தட்டில் வைத்து மேலே வெண்ணெய் மற்றும் தேன் ஊற்றி சூடாக பரிமாறவும். அவ்வளவுதான் சாஃப்ட்டான பேன்கேக் தயார். இதனுடன் வாழைப்பழம், பெர்ரி வகை பழங்கள், துருவிய பாதாம் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.