Soan Papdi Recipe : சோன் பப்டி பிரியரா நீங்கள்? இனி சோன் பப்டி வீட்டிலே செய்யலாம்..ரெசிபி இதோ!
என்னத்தான் சோன் பப்டி வட இந்திய இனிப்பு வகை என்றாலும் கூட தமிழ்நாட்டில் பெட்டிக்கடை முதல் உயர்தர இனிப்பு கடைகள் வரை அனைத்திலும் சோன் பப்டி கிடைக்கிறது. பலரும் அதை வாங்கி ருசித்தும் மகிழ்கின்றனர். வீட்டிலே சோன் பப்டி எவ்வாறு செய்யலாம் என்று பார்போம்!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதேவையான பொருட்கள் : அரை கப் மைதா மாவு, ஒரு கப் கடலைப் பயறு மாவு, அரைக்கப் நெய், ஒரு கப் சர்க்கரை,எலுமிச்சை பழம் மற்றும் உப்பு தேவையான அளவு. எண்ணெய் சிறிதளவு ,பிஸ்தா பாதாம் மற்றும் முந்திரி தேவையான அளவு. ஏலக்காய் சிறிதளவு.
ஒரு வாணலியை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து,அதில் அரை கப் அளவு நெய் ஊற்றி உருக வைக்கவும். நெய் உருகியதும்,அதில் கடலை மாவை போட்டு,அதை ஒரு கரண்டியின் மூலம் நன்கு கலந்து விடவும்.பின்பு அதில் மைதா மாவை போட்டு,அதையும் நன்கு கலந்து விடவும்.
இந்த கலவையானது, வறட்சியான நிலையில்தான் இருக்கும்.ஆனாலும் தண்ணீர் எதுவும் ஊற்றி விடக்கூடாது. பின்னர் அடுப்பை முற்றிலுமாக குறைத்து விட்டு,அதை சுமார் 10 நிமிடம் வரை வதக்கவும். இப்படியாக வதக்கிக்கொண்டே இருக்கும் நேரத்தில், மாவானது நன்றாக உருகி வரும். அப்போது அதில் தேவையான அளவு உப்பு, பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாற்றை சேர்த்து,நன்றாக கலந்து, அதை வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றி வைத்துக்கொள்ளவும்.
எலுமிச்சையை ஒரு பாதி எடுத்து, சாறு பிழிந்து வைத்துக்கொள்ளவும். பாதாம் பிஸ்தா மற்றும் முந்திரி ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடிசெய்து வைத்துக்கொள்ளவும். பின்னர், அரை கப் அளவிற்கு தண்ணீரை வாணலியில் ஊற்றி, சூடுபடுத்தவும்.தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் சமயத்தில் ஏற்கனவே தயாராக வைத்திருக்கும் சர்க்கரையை அதில் சேர்த்து நன்றாக கிளறிக் கொண்டே இருக்கவும்.
இப்போது சர்க்கரையானது நீருடன் நன்றாக கலந்து, கம்பி போன்று கெட்டியாக, பாகு பதத்தில் வரும். பின்னர் ஒரு பெரிய ட்ரெயில் வெண்ணையை தடவி வைத்துக்கொண்டு, இந்த சர்க்கரை பாகை அதில் ஊற்றி, இரண்டு நீளமான கரண்டியின் முனைகளைக் கொண்டு நன்றாக அந்தப் பாகை இழுத்து விடவும். இவ்வாறு திரும்பத்திரும்ப செய்துகொண்டே இருக்கவும். இந்தப் பாகானது,வெள்ளை நிறத்தில் வரும் சமயத்தில்,ஏற்கனவே கலந்து வைத்திருக்கின்ற கடலை பயிறு மற்றும் மைதா மாவையும், துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும், பாதாம்,பிஸ்தா, முந்திரி மற்றும் பொடி செய்து வைத்திருக்கும் ஏலக்காய் ஆகியவற்றை,இந்த கலவையில் போட்டு நன்றாக கலக்கும் படியாக இழுத்து விடவும்.
இந்த கலவையை எவ்வளவு நேரம் இழுத்து விடுகிறீர்களோ,அந்த அளவிற்கு மிருதுவாகவும், தூள் தூளாகவும், உடையும் தன்மையோடு வரும். பின்னர்,ட்ரேயில் அழகாக தட்டி, தேவையான வடிவத்தில் வெட்டிக்கொள்ளவும். ஆறியபின்,வெட்டிய வடிவத்தில் நீங்கள் வீட்டிலேயே தயாரித்த சோன்பப்படியானது, சுவைப்பதற்கு தயாராக இருக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -