Chicken soup recipe: காரசாரமான சிக்கன் சூப் வீட்டிலேயே செய்யலாம்..இதோ ரெசிபி!
இனிமேல் காரசாரமான சிக்கன் சூப் குடிக்க கடைகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதோ இந்த சிக்கன் சூப் ரெசிபியை வீட்டிலேயே செய்து அசத்துங்கள்.
தேவையான பொருட்கள்: முழு தனியா - 2 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, முழு மிளகு - 1 தேக்கரண்டி, இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 8 பற்கள், எண்ணெய் - 2 தேக்கரண்டி, பட்டை - 1 துண்டு, கிராம்பு - 2, ஏலக்காய் - 2, பிரியாணி இலை - 1, வெங்காயம் - 1 நறுக்கியது, பச்சை மிளகாய் - 1 நறுக்கியது, கறிவேப்பில்லை, தக்காளி - 2 நறுக்கியது, மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, எலும்புள்ள சிக்கன் - 500 கிராம், உப்பு - 1 தேக்கரண்டி, தண்ணீர் - 3 கப் (750 மில்லி), கொத்தமல்லி இலை.
செய்முறை : முதலில் முழு தனியா, சீரகம், முழு மிளகு ஆகியவற்றை உரலில் போட்டு தட்டி பொடித்து கொள்ளவும், அடுத்து இஞ்சி மற்றும் பூண்டு போட்டு தட்டி பொடித்து எடுத்து கொள்ளவும்.
பிறகு, பிரஷர் குக்கரில், எண்ணெய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பில்லை போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு சேர்க்கவும். பச்சை வாசனை போனதும், தக்காளி சேர்த்து அடுத்து இதில் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பிறகு அதனுள் சிறு துண்டுகளாக நறுக்கிய சிக்கனை சேர்க்கவும்.
இதில், உப்பு மற்றும் இடித்து வைத்த மசாலா தூள் சேர்க்கவும்.
பிறகு, கூறப்பட்டுள்ள அளவு தண்ணீர் ஊற்றி, பிரஷர் குக்கரை மூடவும். 3 விசில் வரும் வரை வேகவிட்டு இறுதியாக கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கினால், சூடான சிக்கன் சூப் தயார்.