Jawan Trailer Review : அண்ணனின் கதையை எடுத்த தம்பி.. ஜவான் ட்ரெய்லரின் குட்டி விமர்சனம் இங்கே!
அட்லீயின் முதல் பாலிவுட் படமான ஜவானில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், பிரியா மணி, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.
வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியாகவுள்ள ஜவான் படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன் விமர்சனத்தை இங்கு காண்போம்.
பழைய கணக்கை தீர்க்கும் கோவத்துடன் இருக்கும் கதாநாயகன் மெட்ரோ ரயிலை ஹைஜாக் செய்கிறார். 2:45 நிமிட ட்ரெய்லரில் முக்கால்வாசி காட்சிகளில் புது புது கெட்டபில் வருகிறார் ஷாருக்கான்.
இதற்கு இடையே நயன் -தீபிகா உடன் ஒரு குட்டி ரொமான்ஸ். காதல் காட்சிகளில் ரசிகர்களை கவரும் நயன் திடீரென்று ஸ்ட்ரிக்ட் ஆஃபிசராக மாறுகிறார். பின் வருகிறது வில்லனான விஜய் சேதுபதியின் என்ட்ரி.
அதன் பின் ஒரே ஆக்ஷன் காட்சிகள்தான். என்னடா இந்த ட்ரெய்லருக்கு முடிவே இல்லையா.. படம் முழுவதையும் இதிலே காட்டிவிடுவார்கள் போல, என்ற அளவிற்கு உள்ளது இந்த ட்ரெய்லர்.
கதைகளத்தின் யூகம் : ஷாருக்கான் அப்பா - மகன் என டபுள் ஆக்ஷனில் நடித்திருக்கிறார். அப்பாவிற்கு ஜோடியாக தீபிகா படுகோனும், மகனுக்கு ஜோடியாக நயன் நடித்துள்ளனர். அப்பா ஜவானாக உள்ளார். அப்பா எதிர்கொண்ட பிரச்சினைக்காக பழிவாங்குகிறார் மகன், எதிர்பாராத விதமாக மகன் சிக்கிக்கொள்ள அப்பா எண்ட்ரி கொடுக்கிறார்.
இதில் வரும் நயன் ஷாருக்குடன் கொஞ்சம் ரொமான்ஸ், கொஞ்சம் ஆக்ஷன் என தனது கதாபாத்திரத்தில் என்ன செய்ய முடியுமோ அதை செய்திருக்கிறார். வில்லனான விஜய் சேதுபதி அப்பா காலத்தில் தொடங்கி பிள்ளைக்கும் தள்ளாடும் வயதில் டஃப் கொடுக்கிறார்.
ஆகமொத்தம் முதல் பாதியில் பீஸ்ட் படத்தின் மால் ஹைஜாக்கை தழுவிய மெட்ரோ ரயில் ஹைஜாக்கும், இரண்டாம் பாதியில் வில்லு படத்தில் வரும் அப்பாவின் ப்ளாஷ்பேக்கும் இடம்பெறும் போல. ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் அட்லீ, விஜய்தான் இப்படம் எடுக்க காரணம் என்று கூறினார். ஆனால், இந்த அளவிற்கு விஜய் இன்ஸ்பிரேஷனாக இருந்திருப்பார் என்பதை நினைத்தும் கூட பார்க்கவில்லை.