August 16 1947: சுதந்திரம் கிடைத்த காலத்திற்கே நம்மை அழைத்து செல்லும் கதையா 1947? குட்டி விமர்சனம்..இதோ!
வெளியுலக தொடர்பே இல்லாத கிராமம்.. அங்கு வாழும் மக்களிடம் சுதந்திரம் கிடைத்த செய்தியை மறைக்க நினைக்கும் கொடூர வில்லன்…இறுதியில் என்ன ஆனது? இதுதான் ஆகஸ்டு 16 1947 படத்தின் கதை.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App1947ஆம் ஆண்டு, இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைப்பதற்கு ஒரு வாரம் முன்பிருந்து கதை ஆரம்பிக்கிறது. வெளியுலக தொடர்பே இல்லாத 'செங்காடு' எனும் கிராமம், பருத்தி நூல் வளம் நிறைந்த இடம். அவ்வூர் மக்களுக்கு, பருத்தி நெய்து பிழைப்பதுதான் வாழ்வாதாரம்.
அவ்வூர் மக்களை, 16 மணி நேரம் வேலை வாங்கும் அரக்கன், ராபர்ட் க்ளைவ். இவரை எதிர்போருக்கு மரணம், வேலை செய்யாதோருக்கு சவுக்கடி-சுடுநீர் அபிஷேகம்.
ராபர்ட்டின் மகன் ஜஸ்டின், கண்ணில் படும் பெண்களை தூக்கிக்கொண்டு போய் வன்கொடுமை செய்யும் கொடுமையானவனாக காட்சிப்படுத்தப்படுகிறான். இவர்கள் செய்யும் அட்டூழியங்களுக்கு அவ்வூர் ஜமீன்தார் துணை போகிறார்.
ஜமீன் தாரின் மகளையும் ஒரு கட்டத்தில் அடைய நினைக்கும் ஜஸ்டினை, அவளது சிறுவயது நண்பணும், அவளை ஒரு தலையாக காதலிப்பவனுமான பரமன் (கௌதம் கார்த்திக்) கொள்கிறான். இதற்கிடையில், ராபர்ட், இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த விஷயம் தெரிய வர, அதை கிராம மக்களிடமிருந்து மறைத்து அதன் மூலம் ஆதாயம் காண விரும்புகிறான்.
தனது மகன் ஜஸ்டின் இறந்த செய்தியை அறிந்ததும், அவனைக் கொன்ற பரமனை பழி தீர்க்க வேண்டும் என புறப்படுகிறான், ராபர்ட். இறுதியில் பரமனின் நிலை என்ன ஆனது? செங்காடு மக்களுக்கு சுதந்திரம் கிடைத்த செய்தி தெரிந்ததா? போன்ற கேள்விகளுக்கு விடையாக வருகிறது, க்ளைமேக்ஸ்.
2010 ஆம் ஆண்டு வெளியான மதராசபட்டினம் படத்தையடுத்து, சுதந்திர காலத்திற்கு ஏற்ற காட்சியமைப்புகள் மற்றும் ஆடை வடிவமைப்பினை இந்த படத்தில்தான் பார்க்க முடிந்தது.
காமெடி மற்றும் சென்டிமென்ட் ரோல்களில் நடித்து வந்த சாக்லேட் பாய் கௌதம் கார்த்திக்கிற்கு நன்றாக நடிக்க நல்ல வாய்ப்பு கொடுத்திருக்கிறது, 1947 திரைப்படம். எந்த இடத்திலும் மிகையாக இல்லாமல், அளவான நடிப்பை வெளிப்படுத்தி 'பத்து தல' படத்தில் வாங்கிய பெயரை காப்பாற்றியிருக்கிறார் கௌதம்.
நாக்கு அறுபட்ட நிலையில் மக்களிடம் உண்மையை சொல்ல போராடும் இடத்தில் அப்ளாஸ் அள்ளுகிறார். படத்தின் நாயகி, ரேவதி தனது சாயலில் கீர்த்தி சுரேஷை நினைவு படுத்துகிறார். இவருக்கு இது முதல் படம் என்பது போல் தெரியவில்லை. அந்தளவிற்கு தேர்ந்த நடிப்பு.
தொய்வான காட்சிகள் சில இடங்களில் இருப்பினும், படத்தின் மீதான ரசிகர்களின் கவனத்தை ஒரு துளி கூட சிதற விடாமல் காப்பாற்றியிருக்கிறார், இயக்குநர் என்.எஸ்.பொன்குமார். மொத்தத்தில், ரசிகர்களை எந்த இடத்திலும் 'உச்' கொட்ட வைக்காமல் இறுதியில் நல்ல வரலாற்று பின்னணி கொண்ட கதை என பெயர் பெறுகிறது, ஆகஸ்டு 16 1947.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -