பிரீத்தா – லஷ்வின் குமார் திருமணம்; ரஜினி, கமல், வைரமுத்து உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் பங்கேற்பு!
வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் ஐசரி கணேஷ். இவர், தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் லிமிடெட் மூலமாக கிட்டத்தட்ட 25க்கும் அதிகமான படங்களை தயாரித்து ஹிட் கொடுத்துள்ளார்.
இவருடைய மூத்த மகள் தான் பிரீத்தா கே கணேஷ். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், இன்று பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடந்துள்ளது.
பிரீத்தா தனது மூத்த மகள் என்பதால், அவரது திருமணத்தை ஊரே மெச்சும் வகையில் நடத்த வேண்டும் என்று ஆசைப்பட்ட ஐசரி கணேஷ் ,அதற்கான முயற்சியிலும் இறங்கினார்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு என்று தனியாக சென்னை ஈசிஆரிலுள்ள பழைய டிரைவின் தியேட்டரான பிரார்த்தனா தியேட்டரில் தான் ரூ.30 கோடிக்கு செட் போடப்பட்டிருக்கிறது.
அங்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், அதே பகுதியில் உள்ள ஆர்கே மஹாலில் இன்று திருமணம் நடந்துள்ளது.
இந்த திருமணத்தைத் தொடர்ந்து மாலத்தீவு பகுதியிலும் திருமணம் நடைபெற இருப்பதாக சொல்லப்படுகிறது. இது பிரீத்தாவின் விருப்பம் என்பதால் அதை ஐசரி கணேஷ் நடத்தி மகளின் ஆசையை நிறைவேற்ற உள்ளார்.
இதற்காக தனி விமானமும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாம். இந்த திருமண நிகழ்ச்சிக்கு என்று 300 பேர் மாலத்தீவு செல்கிறார்களாம். பிரீத்தாவிற்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை லஷ்வின் குமார் ஆர்க்கிடெக் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரீத்தா – லஷ்வின் குமார் திருமண நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், கமல் ஹாசன், சூர்யா, மணிரத்னம், ரவி மோகன், கெனிஷா, சுஹாஷினி, வெற்றிமாறன், சீமான், ஜீவா, டி ராஜேந்தர், பிரியா ஆனந்த், பிரசாந்த், கார்த்தி, வைரமுத்து என்று கோலிவுட் திரையுலகை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி அரசியல் பிரபலங்கள் பலரும் பிரீத்தா லஷ்வின் குமார் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.