Swimming Record : மகாபலிபுரம் முதல் சென்னை வரை.. 50 கிமீ நீந்தி சாதனை படைத்த சிறுவன்!
சிறப்பு குழந்தையான ஹரேஷ் பரத் மோகன் எனும் சிறுவன் மகாபலிபுரம் முதல் சென்னை வரை 50 கி.மீ கடலில் நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
ஆசிய சாதனைப் புத்தகத்திலும் இந்திய சாதனைப் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார். இது சார்ந்த சான்றிதழைக் கண்காணிப்பாளர் குழு வழங்கியது.
ஹரேஷின் தந்தை சிறுவயதில் இருந்து அவருக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க ஆரம்பித்துள்ளார். அத்துடன் பயிற்சியாளர்களை வைத்தும் நீச்சல் கற்றுக்கொண்டார்.
நீண்ட தூரம் நீந்துவதில் ஹரேஷிற்கு ஆர்வம் வந்த பிறகு, 2023 அக்டோபர் 7ஆம் தேதி தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை ஹரேஷை நீந்த விட்டுள்ளார்கள். கடல் சீற்றமாக இருந்த நிலையிலும் 27கி.மீ தூரத்தை 11 மணி நேரம் 52 நிமிடங்கள் 20 வினாடிகளில் நீந்தி, தனுஷ்கோடியை அடைந்துள்ளார்.
அடுத்தகட்டமாக மகாபலிபுரத்தில் நள்ளிரவு இரண்டு மணிக்கு தொடங்கி நீந்த ஆரம்பித்தார். நீந்தத் தொடங்கிய 10 -15 நிமிடங்களில் அவர் மீது பாம்பு ஏறியது. ஜெல்லி மீன்களும் தொந்தரவு செய்தன. இவை அனைத்தையும் கடந்து 15 மணி நேரம் 21 வினாடிகளில் சென்னை கண்ணகி சிலையை அடைந்தார் ஹரேஷ்.
இந்த வெற்றிக்கு ஹரேஷின் ஐந்து ஆண்டு பயிற்சியே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.வருங்காலத்தில் பல உலக சாதனைகள் செய்வார் என்று தேர்வுக்குழுவினர் பாராட்டி வாழ்த்தினார்கள்.